சோல்: தென்கொரியாவின் ஜேஜூ தீவில் சுற்றுலாப் பயணிகள் சட்டவிதிமுறைகளை மதிக்காமல் நடப்பது அங்குள்ள அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால், அனுமதி இல்லாத இடங்களில் சாலைகளை கடப்பது, குப்பை போடுவது, பொது இடத்தில் சிகரெட் புகைப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
தற்போது குறும்பு செயல்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் மீது அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர் ஜேஜூ அதிகாரிகள்.
ஜூன் 25ஆம் தேதி கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டனர். அதில் 9 பேர் விதிமுறைகளை மீறியதாக அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறியவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று அதிகாரிகள் கூறினர்.
வட்டார விதிமுறைகளை பயண நிறுவனங்களும் பயண உதவியாளர்களும் சுற்றுலா வருபவர்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

