டா நாங்: இணைய மோசடி, சட்டவிரோதமாகப் பொழுதுபோக்கு கூடங்களில் வேலை பார்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 59 வியட்னாம் நாட்டினரை அந்நாட்டு அதிகாரிகளிடம் கம்போடியா வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 30) ஒப்படைத்தது.
அவர்களில் 42 பேர் ஆண்கள். 17 பேர் பெண்கள். வியட்னாமைச் சுற்றி இருக்கும் சில நகரங்களையும் 23 மாநிலங்களையும் சேர்ந்த அவர்கள், டா நாங் பகுதியில் இருக்கும் டா நாங் அனைத்துலக எல்லை வாயில் வழியாக அனுப்பப்பட்டனர்.
அவர்களில் பலர், சமூக ஊடகங்களில் வெளியான வேலை தொடர்பான விளம்பரங்களை நம்பி கம்போடியாவுக்கு வந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சிலர் சரியான ஆவணங்களுடனும் பலர் சட்டவிரோதமாகவும் கம்போடியாவுக்குள் நுழைந்ததாக அவர்கள் கூறினர்.
பின்னர், நோம்பென், சுவாய் ரியங் ஆகிய பகுதிகளில் இருக்கும் பொழுதுபோக்கு கூடங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் சேவைப் பணியாளர்களாகவோ அல்லது உதவியாளர்களாகவோ வியட்னாம் நாட்டினர் வேலை பார்த்ததாக கம்போடிய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அவர்களில் சிலர், இணையச் சூதாட்டக் கும்பலுக்காகப் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

