புத்ராஜெயா: மலேசியாவின் தோட்ட, வர்த்தகப் பொருள் அமைச்சரான திரு ஜொஹாரி அப்துல் கானி, இயற்கை வளங்கள், சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் பொறுப்புகளையும் உடனடியாக ஏற்கிறார்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரும் அமைச்சரவை செயலாளருமான திரு ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் அதுகுறித்து அறிக்கை வெளியிட்டார்.
அந்த விவகாரம் தொடர்பில் ஒப்புதல் அளித்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், இம்மாதம் 9ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் அதுபற்றி அறிவித்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
மே 28ஆம் தேதி, இயற்கை வளங்கள், சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் பதவியிலிருந்து ஜூலை 4ஆம் தேதியிலிருந்து விலகுவதாகத் திரு நிக் நாஸ்மி நிக் அகமது அறிவித்தார்.
2022ஆம் ஆண்டு இயற்கை வளங்கள், சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சரான திரு நிக் நாஸ்மி, முக்கிய சீர்திருத்தங்களை அமல்படுத்த தம்மால் ஆனதைச் செய்ததாகத் தெரிவித்தார்.
1974ஆம் ஆண்டு சுற்றுப்புறத் தரச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்ததோடு சுற்றுப்புறத்தில் ஏற்பட்ட தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தது திரு நிக் நாஸ்மி செய்த குறிப்பிடத்தக்க சில சாதனைகள்.
அண்மையில் நடைபெற்ற கெஅடிலான் ரக்யாட் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவியைத் தக்க வைக்க தவறியதைத் தமது தோல்விகளில் ஒன்றாக திரு நிக் நாஸ்மி குறிப்பிட்டார். தாம் பதவி விலக அதுவும் ஒரு காரணம் என்றார் அவர்.


