நியூயார்க்: ஜான்சன் & ஜான்சன் அழகுப் பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்தியதால் மூன்று பெண்களுக்குப் புற்றுநோய் ஏற்பட்டதாக அவர்களின் குடும்பங்கள் அந்நிறுவனத்தின்மீது வழக்கு தொடுத்திருந்தனர்.
அந்த வழக்கின் தீர்ப்பு நடுவர் மன்றத்துக்குச் சென்றது. வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் அம்மூன்று மாதர்களின் கருப்பைப் புற்றுநோய்க்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் காரணமல்ல என்று தெரிவித்தது. அலட்சியமாக அந்நிறுவனம் அதன் அழகு சாதனங்களை விற்பனை செய்யவில்லை எனவும் மன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது.
மேரி ஓவன்ஸ், போனி டியன்கன், ஜெனீவா வில்லியம்ஸ் ஆகிய அந்த மூன்று பெண்களும் ஜான்சன் & ஜான்சன் அழகு சாதனங்களைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டு பிறகு அவர்கள் மரணமடைந்துவிட்டனர் என அவர்களது குடும்பங்கள் அப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தைக் குற்றஞ்சாட்டின.
பல்லாயிரக் கணக்கான வழக்குகள்
இதுவரை 67,000 தனிப்பட்ட நபர்கள் அந்த நிறுவனத்தின் அழகு சாதனம், குறிப்பாக மாவுத்தூள் (பவுடர்) போன்ற பொருள்கள் கருப்பைப் புற்றுநோயை ஏற்படுத்தியதாக வழக்குகள் தொடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அழகுப் பராமரிப்புப் பொருளைை 2020ஆம் ஆண்டிலிருந்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டது.
சில வழக்குகளில் நிறுவனம் வெற்றி பெற்றிருந்தாலும் பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஒரு சில வழக்குகளில் நிறுவனம் நஷ்ட ஈடுகளை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கியுள்ளது.

