நியூ ஜெர்சி: குழந்தைகளுக்கான பவுடர் உள்ளிட்ட தயாரிப்புகள் கருப்பைப் புற்றுநோயை ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 5.5 பில்லியன் அமெரிக்க டாலரை (S$7.10 பில்லியன்) ஒதுக்கியுள்ளது.
அந்த வழக்குகளில் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் 15 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தீர்வு என்றும் ஜான்சன் & ஜான்சன் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 76,000 வழக்குகள் தொடர்பான இந்தச் சமரசத் திட்டத்தின்படி, மனுதாரர்களுக்கு 2027ஆம் ஆண்டில் 3 பில்லியன் டாலர் வரையிலும் எஞ்சிய தொகையை 2028ஆம் ஆண்டிற்குப் பிறகும் வழங்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
எனினும், நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ள கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 95 விழுக்காட்டினர் இதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிறுவனத்தின் ஒப்பந்தம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் அஸ்பெஸ்டாஸ் இருந்ததாக அந்த நிறுவனத்தின்மீது பல ஆண்டுகளாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்தன.
ஆனால் தன் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தவில்லை என்று அந்நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
முன்னதாக, 2020ல் வட அமெரிக்காவிலும் 2023ல் உலகளவிலும் டால்கம் பவுடருக்குப் பதிலாகச் சோள மாவு அடிப்படையிலான தயாரிப்புகளுக்கு நிறுவனம் மாறியது.
அதேவேளையில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிறிஸ் சீகர், இந்தச் சமரசம் காலம் தாழ்ந்து கிடைத்த நியாயமான நீதி என்று கூறியுள்ளார்.
கருப்பை புற்றுநோய்க்கும் டால்கம் பவுடருக்கும் இடையிலான நேரடி ஆதாரங்களை மனுதாரர்கள் வழங்க வேண்டும் என்று கூட்டாட்சி நீதிபதி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். பல்வேறு வழக்குகளில் இதுவரை மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


