ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் இயங்கும் தரவு நிலையங்களும் தளவாட நிறுவனங்களும் ஜோகூரில் உள்ள இப்ராகிம் டெக்னோபொலிஸ் வளாகத்திற்குள் அமைந்துள்ள தரவு நிலைய நடுவமான செடனாக் டெக் பார்க் வெஸ்ட்டிற்குச் (ஸ்டெப்வெஸ்ட்) செல்லக்கூடும் என்று கருதப்படுகிறது. நிலப்பகுதிகளின் விலை தொடர்ந்து கூடிவருவதால் அவை நெருக்குதலைச் சந்திப்பதாகக் கூறப்பட்டது.
ஜோகூர்-சிங்கப்பூர்ச் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்குள் ஐபிடெக் (Ibtec) எனும் 2,950 ஹெக்டர் பரப்பளவு கொண்ட தொழிற்பேட்டை அமைந்துள்ளது.
தொழிற்பேட்டையை உருவாக்கும் ஜேலேண்ட் குழுமம், ஸ்டெப்வெஸ்ட்டில் அடுத்த மூவாண்டில் 40 பில்லியன் ரிங்கிட் (S$12.6 பில்லியன்) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஜோகூர் பாருவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அக்மல் அகமது அந்தத் தகவலை வெளியிட்டார்.
மாநிலத்தின் முதலீட்டு நிறுவனமான ஜோகூர் கார்ப்பரேஷனின் சொத்து, உள்ளமைப்புக் கிளை நிறுவனம் ஜேலேண்ட்.
ஐபிடெக் தொழிற்பேட்டையில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஸ்டெப்ஈஸ்ட் தரவு நிலைய நடுவம் ஏராளமான முதலீட்டை ஈர்த்துள்ளதாகத் திரு அக்மல் கூறினார். 11 அனைத்துலக நிறுவனங்கள், 30 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் முதலீடு செய்ய உத்தரவாதம் தந்திருப்பதாக அவர் சொன்னார்.
அந்த நிறுவனங்கள் சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்தவை என்று திரு அக்மல் தெரிவித்தார்.
ஸ்டெப்வெஸ்ட் தொழிற்பேட்டையில் இரண்டு ஹெக்டர் முதல் 23 ஹெக்டர்வரை பரப்பளவு கொண்ட 22 நிலத்தொகுதிகள் உள்ளன.
ஐபிடெக், புத்தாக்கச் சோதனை வளாகமாக உருவெடுக்க முனைகிறது. சில தீர்வுகளை வட்டார அளவில் கொண்டுசெல்வதற்கு முன்னர், உண்மையான சூழலில் நிறுவனங்கள் அங்கு அவற்றைச் சோதித்துப் பார்க்கலாம். கோத்தா இஸ்கந்தரில் இந்த வாரம் தொழிற்பேட்டையின் அறிமுகத்திற்கு முன்னர், அது வழங்கவிருக்கும் வசதிகளைப் பகிர்ந்துகொண்டார் திரு அக்மல். செயல்முறைகளுக்கான நேரத்தைக் குறைக்கப் பல அம்சங்கள் இருப்பதாக அவர் சொன்னார். முன்கூட்டியே உருவாக்கப்பட்ட மின்கட்டமைப்பு, இணைப்பு, போக்குவரத்து உள்ளமைப்பு போன்ற வசதிகளைத் திரு அக்மல் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
தென்கிழக்காசியாவில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுவரும் தரவு நிலைய நடுவம் எனும் பெயரை ஜோகூர் நிலைநிறுத்திவரும் வேளையில் அண்மைய அறிவிப்பு வந்துள்ளது.

