பொருளியல் மண்டலத்தின் பலன்களை வடக்கு நோக்கி விரிவுபடுத்த ஜோகூர் இலக்கு

பொருளியல் மண்டலத்தின் பலன்களை வடக்கு நோக்கி விரிவுபடுத்த ஜோகூர் இலக்கு

படம்: புளூம்பர்க்

24 Nov 2026 - 3:56 pm

2 mins read

இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் பொருளியல் நன்மைகளை ஜோகூர் மாநிலத்தின் வடக்கு பகுதிக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகளை ஜோகூர் மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக, பிற மாவட்டங்கள் முழுவதும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த முன்னெடுப்பு, ‘மாஜு ஜோகூர் 2030’ செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ஜோகூர் பொருளியல் உருமாற்றத் திட்டத்தின்’ வாயிலாகக் கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது. இது, ஜோகூர் மாநிலத்தின் வடக்கு, தெற்குப் பகுதிகளை ஒரே பொருளியல் சூழல் அமைப்பின் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் பகுதிகளாகக் கருதுகிறது.

விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவது வடக்கு வட்டாரத்தில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள், உள்ளூர் தொழில்முனைவோர், சேவை வழங்குநர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்று மாநில முதலீடு, வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரங்கள், மனிதவளக் குழுவின் தலைவர் லீ டிங் ஹான் தெரிவித்தார்.

“ஜோகூர் மாநிலத்தின் வடக்கு, தெற்குப் பகுதிகளை மேம்படுத்துவதை, மாநில அரசு இரண்டு தனித்தனி திட்டங்களாகப் பார்க்கவில்லை. மாறாக, இவை ஒரே மாநிலப் பொருளியல் சூழல் அமைப்பின் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் அங்கங்களாகவே கருதப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

உற்பத்தித் துறை, வேளாண்-உணவு பதப்படுத்துதல், விவசாயம், தளவாடங்கள், வர்த்தகம், தொழில்துறை ஆதரவுச் சேவைகள் போன்றவை, இத்தகைய மேம்பாட்டு நடவடிக்கைகளின் பலன்களைப் பெறக்கூடிய துறைகளாக இருக்கும் என்று திரு லீ ஜோகூர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில், சுமார் 2,000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட ‘செகாமட் உணவுப் பாதுகாப்பு மண்டலம்’, 2026ஆம் ஆண்டில் ஜோகூரில் மேற்கொள்ளப்படவுள்ள 27 வேளாண்-உணவுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 32.12 மில்லியன் ரிங்கிட் நிதி, 2026-2030 இடைப்பட்ட காலத்திற்கான ‘சிகாமட் ஜோகூர் பொருளியல் உருமாற்றத் திட்டத்தின் செயல் திட்டம்’ ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுகிறது.

இடைப்பட்ட காலத்தில், மாநில அரசாங்கம், ‘சிகாமட் உள்நாட்டுத் துறைமுகம்’ மேம்பாடு, ‘சிகாமட் ஜோகூர் பொருளியல் உருமாற்றத் திட்டத்தின் செயல் திட்டம், தொழில்நுட்ப, தொழிற்கல்வி, பயிற்சி’ ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இதன் நோக்கம் தளவாடத் திறன்களை வலுப்படுத்துவதும், உள்ளூர் திறமையாளர்களை மேம்படுத்துவதும் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர் பாருபொருளியல்தொழில்துறை