இஸ்கந்தர் புத்ரி: முக்கியமான, புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மலேசியா போதுமான உபரி எரிசக்தியை உருவாக்கி வருவதாகவும் அதன் ஏற்றுமதிகளை அதிகரிக்க வகைசெய்வதாகவும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
சிங்கப்பூருடனான சிறப்புப் பொருளியல் வட்டாரத் திட்டம் தொடர்பில் முதலீட்டாளர்களை ஈர்ப்பது குறித்து மலேசியா ஆராய்ந்து வருவதாக ஜோகூரில் நடந்த முதலீட்டு நிகழ்வு ஒன்றில் அவர் சொன்னார்.
சிங்கப்பூருக்கு வடக்கே உள்ள மலேசியாவின் தென் ஜோகூர் மாநிலத்தில் இந்தச் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை ஆண்டிறுதிக்குள் உறுதிப்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
மக்கள் மட்டுமன்றி சரக்குகளின் நடமாட்டத்தை எளிதாக்குவதுடன் முதலீடுகளை ஈர்க்கவும் இத்திட்டம் உருவாகி வருகிறது.
மலேசிய அரசாங்கம் தொடர்ந்து புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திட்டங்கள், எரிசக்தி உருமாற்றத் திட்டங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முயலும் என்றார் திரு அன்வார்.
தரவு மைய வளாகங்களில் பேரளவிலான முதலீட்டை அண்மைய ஆண்டுகளாக ஈர்த்துள்ள நிலையில், எரிசக்திக்கான தேவை அதிகரிப்பதை எதிர்பார்த்த வண்ணம் உள்ளது ஜோகூர்.
முதலீடுகள் அதிகரித்துள்ளதால் மலேசியாவின் பொருளியலும் இவ்வாண்டு மேம்பட்டதாக திரு அன்வார் சுட்டினார்.
பொருளியல் வளர்ச்சியைத் தவிர மலேசியப் பங்குச் சந்தையும் வட்டாரத்திலேயே ஆகச் சிறப்பாகச் செய்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.