மத்திய கிழக்கு நெருக்கடி நீடித்தால் உணவு விலைகளை உணவகங்கள் உயர்த்தக்கூடும்

கவனத்துடன் அணுகும் ஜோகூர் பாரு உணவகங்கள்

மத்திய கிழக்கு நெருக்கடி நீடித்தால் உணவு விலைகளை உணவகங்கள் உயர்த்தக்கூடும்

2 mins read
b9a37db1-a45c-4da4-b243-5c7ccfbdc0d3
இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து ஜோகூர் உணவகங்கள் மூலப்பொருள்களுக்கு 20 முதல் 30 விழுக்காடு கூடுதல் விலைகொடுத்து வருகின்றன. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: மத்திய கிழக்கில் நிலவும் சூழலை அணுக்கமாகக் கவனித்துவரும் ஜோகூர் பாரு உணவகங்கள், விலைகளை உயர்த்துவதற்குமுன் கவனமான அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றன.

மத்திய கிழக்கு நெருக்கடி மேலும் நீடித்தால் விலைகளைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஜோகூர் இந்திய முஸ்லிம் தொழில்முனைவர் சங்கத்தின் (பெருசிம்) செயலாளர் ஹுசைன் இப்ராகிம் கூறினார்.

“மார்ச் மாதத்திலிருந்து மூலப்பொருள்களுக்கு 20 முதல் 30 விழுக்காடு கூடுதல் செலவானாலும் இதுவரை நாங்கள் உணவு விலைகளை உயர்த்தவில்லை,” என்றார் திரு ஹுசைன்.

“மலேசியப் பயனீட்டாளர்கள் விலை மாற்றங்களை உடனடியாகக் கவனிப்பவர்கள் என்பதால் நாங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்திவிட முடியாது. அது எங்களது தொழிலைப் பாதிக்கும்,” என்றும் அவர் சொன்னார்.

‘பெருசிம்’ சங்கத்தில் 338 உணவக நடத்துநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 200 பேர் ஜோகூரில் இந்திய முஸ்லிம் உணவகங்களை நடத்தி வருகின்றனர்.

விலையை உயர்த்தாமல் அளவைக் குறைப்பதுதான் தற்போது தங்கள்முன் உள்ள சிறந்த தெரிவு என்றார் திரு ஹுசைன்.

மேலும், தற்போது பலரும் நேரில் வந்து உணவு உண்ணாமல் இணையவழி விநியோகத் தளங்கள் மூலமாக உணவு வாங்குவதால் அவர்களால் பானத்திற்கான செலவைத் தவிர்க்க முடிகிறது என்றும் அவர் கூறினார்.

கடுமையான பாதுகாப்புச் சோதனைகளால் பாதிப்பு

இதனிடையே, சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியிலும் ஜோகூரின் கடற்பாலத்திலும் பாதுகாப்புச் சோதனைகள் கடுமையாகி இருப்பது ஜோகூர் பாரு உணவகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஜோகூர் பாரு நகர தொழில்முனைவர், வணிகர் சங்கத்தின் தலைவர் ரோலண்ட் லிம் தெரிவித்தார்,

பாதுகாப்புச் சோதனைகள் காரணமாக சற்றுத் தாமதமாகலாம் என்பதால் மோட்டார்சைக்கிளில் வரும் உள்ளூர்வாசிகள் நேரடியாகச் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர் என்றும் எல்லைப் பகுதியில் உள்ள உணவகங்களில் காலை உணவைத் தவிர்த்துவிடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், வேலை முடிந்து திரும்பும்போதும் களைப்பு காரணமாக அவர்கள் உணவகங்களில் உண்ணாமல் நேரடியாக வீட்டிற்குச் சென்றுவிடுவதாகவும் திரு லிம் கவலையுடன் சொன்னார்.

மேலும், வார இறுதி, பொது விடுமுறை நாள்களிலும் குறைவான குடும்பங்களே நகர்ப்பகுதியில் உள்ள உணவகங்களுக்கு வருகின்றன என்றும் அவர் கவலையுடன் கூறினார். அதற்கு, ஜோகூர் பாரு நகர்ப்பகுதியில் இடம்பெறும் உட்கட்டமைப்புத் திட்டங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலே முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது உணவு விலைகளை உயர்த்தாவிட்டாலும் மூலப்பொருள்களின் விலை தொடர்ந்து கூடினால் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்