ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவைக் கட்டணம் $5 முதல் $7 வரை இருக்கலாம்: லோக்

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவைக் கட்டணம் $5 முதல் $7 வரை இருக்கலாம்: லோக்

2 mins read
abba45ca-26c7-4b1c-b23c-0958e7e004f9
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு காரில் செல்வதைவிட ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயிலில் செல்வது மிகவும் செலவு குறைந்ததாக இருக்கும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் குறிப்பிட்டார். - படம்: ஆர்டிஎஸ் ஆப்பரேஷன்ஸ்/ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவைக்கான கட்டணம், ஒருவழிப் பயணத்துக்கு ஏறத்தாழ S$5 முதல் S$7 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

இந்த எல்லை தாண்டும் ரயில் சேவையின் கட்டணங்கள், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பொதுப் போக்குவரத்தைப்போல மலிவாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும், மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு காரில் செல்வதைவிட இது மிகவும் செலவு குறைந்ததாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கட்டணங்கள் 2026ஆம் ஆண்டின் பிற்பாதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேவை தொடங்கப்படும் தேதி நெருங்கும்போது நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் கட்டண முறை தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் லோக் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை 2026ஆம் ஆண்டிறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில், இது தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் உள்ள உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்படும். சிங்கப்பூர்ப் பயணிகளுக்கு மலேசிய அரசாங்கம் கட்டணக் கழிவுகளை வழங்காது என்றும் இதனால் மாதாந்தரப் பயணச்சீட்டுகள் மற்றும் தள்ளுபடித் திட்டங்களை செயல்படுத்துவது சிரமம் என்றும் திரு லோக் கூறினார்.

மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான பிரசரானா மலேசியா, சிங்கப்பூரின் எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ‘ஆர்டிஎஸ் ஆப்பரேஷன்ஸ்’ மூலம் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக அவர் விவரித்தார்.

“சிங்கப்பூர் அரசாங்கம் கட்டணக் கழிவுகளை வழங்காது. எனவே செயல்பாட்டு மாதிரி, நீடித்த நிலைத்தன்மைமிக்க வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும்,” என்று திரு லோக் கூறியதாக சின் சியூ டெய்லி செய்தித்தாள் மேற்கோள் காட்டியுள்ளது.

தற்போது, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மலேசியாவிற்குள் நுழைய 20 ரிங்கிட் சுங்கவரி செலுத்த வேண்டும். இதில் 5 ரிங்கிட் ஜோகூர் மாநில அரசாங்கத்துக்கும் 15 ரிங்கிட் கூட்டரசு அரசாங்கத்துக்கும் செல்கிறது என்று திரு லோக் கூறினார்.

சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘ஒன்மோட்டரிங்’ இணையத்தளத்தின்படி, வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட கார்கள் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக மலேசியா சென்று திரும்பும் ஒவ்வொரு முறையும் $2.10 செலுத்த வேண்டும்.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக மலேசியாவுக்குள் நுழையும் கார்கள் $0.80 செலுத்த வேண்டும்; ஆனால், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட கார்கள் சுங்கக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட கார்கள் சிங்கப்பூர் வருவதற்கு ஒரு நுழைவுக்கு $6.40 சாலைக் கட்டணம் விதிக்கப்படுகிறது. சுங்கக் கட்டணங்கள் மூலம், ஜோகூர் மாநில அரசாங்கம் ஆண்டுதோறும் ஏறத்தாழ 70 மில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டுகிறது என்றார் திரு லோக்.

குறிப்புச் சொற்கள்