ஜோகூர் பாரு: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவுப் போக்குவரத்து முறையில் ‘ஆர்டிஎஸ் லிங்க்’ வழியைப் பயன்படுத்தும் பயணிகள், சில நொடிகளில் தங்களது குடிநுழைவு அனுமதியைப் பெற்றுவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அதிவிரைவு ரயில் சேவை 2027ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சேவையைத் தொடங்கவுள்ளது.
புக்கிட் சாகார் ஒருங்கிணைந்த குடிநுழைவு, சுங்கம் மற்றும் தனிமைப்படுத்தல் (ஐசிகியூ) வளாகத்தில், பயணிகள் முதலில் ‘ஸ்கேனர்’ சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
அதன் பின்னர், குடிநுழைவுச் சோதனையை முடிக்க ‘இ-கேட்’ பகுதிக்குச் செல்வர் என்று ஆர்டிஎஸ் லிங்க் திட்ட இயக்குநர் ஸுல்கிஃப்லி முகம்மது தெரிவித்துள்ளார்.
அந்த வளாகத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“ஐசிகியூ வளாகத்தில் 100 ‘இ-கேட்’ வழிகள் உள்ளன. அவை அத்தனையும் கியூஆர் குறியீடு அல்லது கடப்பிதழ் வாயிலாகக் குடிநுழைவு அனுமதியைப் பயணிகள் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்றார் அவர்.
மேலும், பயணிகள் நடந்து செல்லும்போதே அவர்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பொருள்களைக் கண்டறியும் திறன் ‘ஸ்கேனர்’களுக்கு உண்டு என்றும் திரு ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.
“சந்தேகத்திற்குரிய பொருள்களைக் கண்டறிந்தால், மற்ற பயணிகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, சம்பந்தப்பட்ட பயணியைப் பாதுகாப்பு அதிகாரி இரண்டாம் கட்டச் சோதனை நிலையத்திற்கு அழைத்துச் செல்வார்,” என்றும் அவர் கூறினார்.
மேலும், ஐசிகியூ வளாகத்தில் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, தொழுகை அறைகள் மற்றும் சுயசேவைப் பயணச்சீட்டு நிலையங்கள் உள்ளிட்ட பல வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளதாகத் திரு ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
கண்காணிப்பு, சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்காக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை, மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வுச் சேவைத் துறை போன்ற பல்வேறு அரசு அமைப்புகளின் அலுவலகங்களும் இந்த ஐசிகியூ வளாகத்திலேயே இயங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.


