ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் இணைப்பு (ஆர்டிஎஸ்), அதன் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. ஆர்டிஎஸ் தண்டவாளத்துக்கு அருகே வசிப்போர் பல ரயில்கள் வேகமாகச் செல்வதைக் கவனித்திருக்கலாம்.
ஆர்டிஎஸ் திட்டக் குழு கடந்த சில மாதங்களாக அதன் மைல்கல்களைப் பகிர்ந்துவருகிறது.
இவ்வாண்டு பிப்ரவரி 5ஆம் தேதி, எல்லைத் தாண்டிய விரைவு ரயில் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. அதையடுத்து ஜோகூர் பாருவில் உள்ள வாடி ஹனா (Wadi Hana) முனையத்திலிருந்து உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திற்கு வர ஆர்டிஎஸ் ரயில் ஒன்று தயார் நிலையில் உள்ளது.
இம்மாதம் 22ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியப் போக்குவரத்து அமைச்சர்கள் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்துக்குச் சென்றனர்.
அங்குத் தானியக்கக் குடிநுழைவு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் அவைச் சோதிக்கப்படுவதையும் சிங்கப்பூர்த் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் பதிவேற்றிய காணொளியில் காண முடிகிறது.
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்கும் தமது மலேசியக் கடப்பிதழைக் குடிநுழைவு வாசலில் காண்பித்து புகைப்படம் எடுப்பதையும் காணொளி காட்டுகிறது.
பல ரயில்களை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் சோதித்துப் பார்த்ததாக ஆர்டிஎஸ் இணைப்பை இயக்கும் ஆர்டிஎஸ்ஓ (RTSO) நிறுவனம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
அந்தச் சோதனை விரிவான சோதனையின் ஓர் அம்சம் என்றும் கட்டமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் செயல்பாடுகளை உறுதிசெய்யவும் பல கட்ட சோதனைகள் நடத்தப்படும் என்று ஆர்டிஎஸ்ஓ குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இம்மாதம் 3ஆம் தேதி திரு லோக், புக்கிட் சாகார் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தும் நிலையத்துக்குச் சென்றிருந்தார்.
பொதுமக்களுக்கு அறிவிக்கும்முன் உத்தேச கட்டணங்கள் குறித்த பரிந்துரைகளை ஆட்டிஎஸ்ஓ நிறுவனம், சிங்கப்பூர், மலேசிய அரசாங்கங்களிடம் முன்வைக்கும் என்றார்.
பிப்ரவரி தொடக்கத்தில் ரயில் சேவைக் கட்டணங்கள் $5லிருந்து $7க்கு இடைப்பட்டிருக்கலாம் என்று திரு லோக் கூறினார்.
ஆர்டிஎஸ் இணைப்பு, இவ்வாண்டு இறுதிக்குள் அதன் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

