தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் பாரு போக்குவரத்து நெரிசல் மோசமாகிறது: வாகனமோட்டிகள்

1 mins read
49398002-1d91-4990-b50f-c522ea2857be
ஜோகூர் பாருவில் போக்குவரத்து நெரிசல் பலரின் வாழ்வாதாரங்களைப் பாதித்துள்ளது. - படம்: தி ஸ்டார்/ஆசியா நியூஸ் நெட்வொர்க்

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் உள்ள போக்குவரத்து நிலைமையில் அதிக மாற்றம் இல்லை. அந்த விவகாரம் கையாளப்படும் என்று மாநில, மத்திய அரசாங்கங்கள் பலமுறை உறுதிகூறியுள்ளபோதும், எந்த மாற்றமும் தென்படவில்லை.

ஜோகூர் பாரு குடியிருப்பாளர்களும் பயணிகளும் போக்குவரத்து நெரிசல் மோசமடைவதையே பார்க்கின்றனர். ஜாலான் ஸ்டூலாங் லாவுட், ஜாலான் தெபுராவ் போன்ற சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் கட்டமைப்பு போன்ற திட்டங்களினால் போக்குவரத்து மேலும் மோசமடைந்திருப்பதாக மாநிலப் பணிகள், போக்குவரத்து, உள்ளமைப்புக் குழுத் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சாலே கூறினார்.

மாநில அரசாங்கம் முன்வைத்த பரிந்துரைகளில் பணிக்குழு அமைப்பதும் ஒன்று எனத் திரு ஃபஸ்லி தெரிவித்தார்.

பரிந்துரைக்கப்பட்ட பணிக்குழு குறித்து கலந்துபேச திரு ஃபஸ்லி போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கைச் சந்தித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பணிக்குழுவைப் போக்குவரத்து அமைச்சரும் ஜோகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹாஃபிஸ் காஸியும் கூட்டாகத் தலைமை தாங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதாகத் திரு ஃபஸ்லி கூறினார். மற்ற அமைச்சுகளும் துறைகளும் அதில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்நிலையில் அப்பகுதியில் காப்பிக் கடை ஒன்றை நடத்தும் ஜோகூர் பாரு வர்த்தக, உணவங்காடிச் சங்கத்தின் தலைவர் ரோலண்ட் லிம், போக்குவரத்து நெரிசல் பலரின் வாழ்வாதாரங்களைப் பாதித்திருப்பதாகக் கூறினார்.

நெரிசல் காரணமாக மக்கள் அங்குச் செல்வதைத் தவிர்ப்பதால் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்