ஜோகூர் பாரு: சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டுவரும், தேசிய முன்னணிக் (பிஎன்) கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் போலியானது என்று ஜோகூர் தற்காலிக முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
ஜோகூருக்கான தேசிய முன்னணித் தலைவருமான திரு ஒன் ஹஃபிஸ், எதிர்வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல், கூட்டணியின் அதிகாரத்துவத் தளங்கள் வழியாக மட்டுமே வெளியிடப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அந்தப் பட்டியல் போலியானது, உண்மையற்றது என்பதை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் புதன்கிழமை (ஜூன் 3) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
இந்தத் தேர்தல் காலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் கண்டனப் பேச்சு, வதந்திகள், போலித் தகவல்கள் உள்ளிட்டவை பரவுவது தவிர்க்க முடியாதது என்று மச்சாப் தொகுதி சட்டமன்ற உறுப்பிரான அவர் குறிப்பிட்டார். டபாயுன் எனும் இஸ்லாமியக் கொள்கைக்கு ஏற்றவாறு தகவல்களைச் சரிபார்த்த பிறகே தகவல்களை ஏற்கவோ பகிரவோ செய்யுமாறு திரு ஒன் ஃஹஃபிஸ் ஜோகூர்வாசிகளைக் கேட்டுக்கொண்டார்.
சரிபார்க்கப்படாத தகவல்களால் தவறான கண்ணோட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க அதிகாரபூர்வ தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.
மேலும் பெரியவர்களைப் போல் நடந்துகொண்டு கண்ணியமான, பொறுப்பான முறையில் அரசியலில் ஈடுபடுமாறு திரு ஒன் ஹஃபிஸ் எல்லா கட்சிகளையும் கேட்டுக்கொண்டார். ஜோகூரில் ஒருமைப்பாடு, நிலைத்தன்மை, ஜனநாயக முறை ஆகியவற்றுக்குப் பொய்த் தகவல் பங்கம் விளைவிக்க விடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

