ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு வட்டாரத்தில் புதன்கிழமையன்று (ஜனவரி 8) ஓர் உணவகத்திற்கு வெளியே 40 வயது ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஜோகூர் மாநிலக் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
“இது ஒரு தனிநபர் தொடர்புடைய சம்பவம். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். இதுகுறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்,” என்று மாநிலக் காவல்துறை தலைவர் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பாதுகாப்பு குறித்து மக்கள் கவலையடைய வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
விசாரணை நடந்து வருவதால் இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் விவாதிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அவர், அது அதிகாரிகளின் வேலைகளுக்கு இடையூறாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தாமான் செட்டியா இண்டா பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் நண்பகல் உணவருந்தியபோது ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மாண்ட ஆடவர் மலேசியர் என்பது காவல்துறை விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது. அவரது உடலில் நான்கு துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன.
“தற்போது அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் பேசி வருகின்றனர், கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து வருகிறோம். எதன் காரணமாக ஆடவர் சுடப்பட்டார் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது,” என்று காவல்துறை தெரிவித்தது.