ஜோகூர் பாரு: மலேசியாவின் முதல் முன்னணி விவேக நகரமாக ஜோகூர் பாரு உருவாகி வருகிறது.
முழு நகரத்தையும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்கீழ் (ஏஐ) அது கொண்டு வந்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும் பொது இடங்களில் குழிகளைக் கண்டறியவும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக ஜோகூர் பாரு நகர மன்றத்தின் முந்தைய பல்நோக்கு மண்டபத்தில் 12 மீட்டர் நீளமுள்ள மாபெரும் மின்திரை அமைக்கப்பட்டுள்ளது. இது, மலேசியாவின் தெற்கு தலைநகர் என்று குறிப்பிடப்படும் ஜோகூர் பாருவின் மூலை முடுக்குகளிலெல்லாம் நிறுவப்பட்டுள்ள 555 கண்காணிப்புக் கேமராக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த, ஜோகூர் பாரு ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து (ஜேபிஐஓசிசி) முழு நகரத்தையும் 24 மணி நேரமும் நேரடியாகக் கண்காணிக்கலாம்.
ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணப்படுவதோடு குப்பைப் போடுபவர்களை கையும் களவுமாகப் பிடிக்க முடியும்.
குடியிருப்பாளர்கள் தங்களுடைய கைப்பேசிச் செயலிகள் மற்றும் நகர மன்றத்தின் மின்னிலக்க வரைபடம் மூலமாக இந்த நிலையத்தின் வசதியைப் பயன்படுத்தி போக்குவரத்து நிலவரங்கள், வாகன நிறுத்துமிடங்கள், வெள்ள அபாயங்கள், பொது கழிப்பறைகளின் தூய்மைக்கான மதிப்பீடுகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ளலாம்.
“இந்த கட்டுப்பாட்டு நிலையம், ஜோகூர் பாரு அடிக்கடி எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு மற்றும் நகர நிர்வாகம்,” என்று டிசம்பர் 4ஆம் தேதி வருகையின்போது ஜேபிஐஓசிசியின் தலைவர் டாக்டர் சூ கோக் வா, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த அமைப்பின் மூலம், குப்பை அகற்றும் பிரச்சினைகள் மூன்று மணி நேரத்திற்குள்ளாகத் தீர்க்கப்படுகின்றன. அதே நேரத்தில் குழிகள் 24 மணி நேரத்திற்குள் சரிசெய்யப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
“கட்டுப்பாட்டு நிலையத்தின் ஏஐ தொழில்நுட்பம், போக்குவரத்து நெரிசல்களை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கேற்ப போக்குவரத்து விளக்குகளின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது.
“கொள்ளை, திருட்டு மற்றும் கடத்தல் போன்ற குற்றங்களுக்குத் தீர்வுகாண இந்த நிலையத்தைக் காவல்துறையினரும் பயன்படுத்த முடியும். குற்றவாளியின் இருப்பிடத்தையும் வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி குற்றவாளிகளின் வாகனத்தையும் அடையாளம் காணவும் புதிய நிலையம் உதவும்,” என்றார் டாக்டர் சூ கோக் வா.

