இஸ்கந்தர் புத்ரி: மெர்சிங் நகரில் விமான நிலையம் அமைப்பது வீண் செலவாகிவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த விரிவான ஆய்வுகள் தேவை என்று ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காசி தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மெர்சிங் நகரில் விமான நிலையம் அமைக்க ஜோகூர் மாநில அரசாங்கம் தயாராக உள்ளது. மெர்சிங் மாவட்டத்திலுள்ள 47 தீவுகள், பாறைத் திட்டுகளுக்குச் செல்லும் போக்குவரத்தை விமான நிலையம் கணிசமாக மேம்படுத்தும். என்றாலும், அதற்கான நிதி, செயல்பாட்டுச் சாத்தியக்கூறுகள் கவனமாக ஆராயப்பட வேண்டும் என்று புதன்கிழமை (நவம்பர் 25) மாநிலச் சட்டமன்றத்தில் உரையாற்றிய அவர் கூறினார்.
இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக, உத்தேச விமான நிலையத் திட்டம் ஏற்கெனவே ‘ஜோகூர் கட்டமைப்புத் திட்டம் 2030’ல் சேர்க்கப்பட்டுள்ளதை திரு ஓன் ஹஃபிஸ் சுட்டிக்காட்டினார்.
மெர்சிங் மாவட்டத்தை ‘ஜோகூரின் மாலத்தீவு’ போல மாற்றியமைக்கும் மாநில அரசின் இலக்கிற்கு ஏற்ப, அந்நகரைப் புதிய பொருளியல் வளர்ச்சி மையமாக உருவெடுக்கச் செய்வதற்குத் தேவையான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
