பொந்தியான்: ஜோகூரில் புகைமூட்டம் காரணமாகப் பள்ளி மூடப்பட்டிருந்தபோதிலும் வகுப்புக்குச் செல்ல ஆசைப்பட்ட அண்ணனும் தங்கையும் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டனர். அவர்களைத் தனது மோட்டார்சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற அவர்களின் மூத்த சகோதரனும் இந்த விபத்தில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூர்டேனியல் அய்மான் நூர்லிஸான், 18, நூர்டேனியல் ஃபிக்ரி நூர்லிஸான், 11, புத்ரி நெளஃபா ரயிஷா நூர்லிஸான், 8, மூவரும் விபத்து நேர்ந்த இடத்தில் அசைவின்றிக் கிடந்ததை அவர்களின் தாத்தா கண்டதாகத் தெரிகிறது. காலையில் வீட்டை விட்டுச் சென்ற பிள்ளைகள் திரும்பாததால் தேடிச் சென்ற தாத்தா, வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் விபத்து நிகழ்ந்த இடத்தில் அவர்களைக் கண்டு நிலைகுலைந்தார்.
புகைமூட்டம் காரணமாகப் பள்ளி மூடப்பட்டிருப்பதாகத் தாயாரும் பாட்டியும் கூறியபோதிலும் பள்ளிக்குச் செல்ல சிறுவன் ஃபிக்ரி பிடிவாதம் பிடித்ததாகவும் தங்கையும் அவனுடன் செல்ல ஆசைப்பட்டதால், மூத்த சகோதரன் இருவரையும் மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது.
“பள்ளிக்குச் சென்ற பயணம் அவர்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை,” என அவர்களின் உறவினர் நூரிமா கமிஸ், 40, கண்ணீருடன் தெரிவித்தார். மூத்த சகோதரன் அய்மான், தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விண்ணப்பித்திருப்பதாக உறவினர் கூறினார்.
தினக்கூலி ஊழியரான குழந்தைகளின் தந்தை நூர்லிசான், வேலையிடத்தில் இருந்தபோது அவரது மாமனாரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு மூலம் இச்செய்தியை அறிந்தார். அவர்கள் மூவரும் அன்பான பிள்ளைகள் என்றும் அதிர்ந்து பேசாத இயல்புடைய அவர்களால் ஒருபோதும் யாருக்கும் தொந்தரவு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உடற்கூராய்வுக்குப் பிறகு பிள்ளைகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. விபத்து நேர்ந்ததற்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மனநல ஆலோசனைச் சேவைகளும் நிதியுதவியும் வழங்கப்படும் என ஜோகூர் மாநிலக் கல்வி, தகவல் குழுத் தலைவர் முகம்மது நாகிப் முகம்மது கஸாலி அறிவித்துள்ளார்.
