ஜோகூர் கட்டுமானத் துறை திண்டாட்டம்: வெளிநாட்டு ஊழியர்கள் தேவை என வலியுறுத்து

2 mins read
a7db9439-d71e-4e74-b61d-a522dd6ac25c
பொருளியல் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் கட்டுமானத் துறை சிரமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. - படம்: த ஸ்டார்

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் கட்டுமானத் துறையில் ஆள் பற்றாக்குறை அதிகமாகிவிட்டதாக ஜோகூர் கட்டுமான நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருளியல் படுவேகமாக வளர்ந்துவரும் நிலையில், கடந்த ஆண்டு முதலே கட்டுமானத் துறையில் போதுமான வேலையாள்கள் இல்லை என அது தெரிவித்துள்ளது.

“இதற்கு முன்னர் அனுபவம் வாய்ந்த, தரமான வெளிநாட்டினரை நேரடியாகக் கொண்டு வந்தோம். தற்போது குத்தகையாளர்கள் மூலமே அவர்களைத் தருவிக்க வேண்டி உள்ளது.

“எனவே, ஆள் கிடைத்தால் போதும் என்று எந்த ஓர் அனுபவமும் இல்லாதோரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்,” என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் கோங் வெங் கியோங் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்டுமானத் துறையில் அனுபவம் இல்லாதோரை வேலைக்கு அமர்த்தும்போது அவர்களுக்குப் பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்குக் கூடுதல் செலவாகிறது.

“அதன் காரணமாக, ஒரு கட்டுமானத் திட்டத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல அதுபோன்ற நிறுவனங்களுக்குக் காலதாமதம் ஏற்படுகிறது.

“கட்டுமானச் செலவு ஒருபுறம் அதிகரிக்கும் நிலையில் வேலையும் மெதுவடைகிறது.

“எனவே, நிலைமை கையை மீறிப் போவதற்குள் மலேசிய அரசாங்கம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என விரும்புகிறோம்.

“ஜோகூர் மேம்பாடு கண்டு வருகிறது. முதலீடுகள் ஊக்கமளிக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் கட்டுமானத் துறையில் ஈடுபடவும் கட்டுமானத் தொழிலை விரிவுபடுத்தவும் அவை உதவுகின்றன.

“ஆனால், கட்டுமான நிறுவனங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வளர்ச்சிக்கான ஆதரவு தேவைப்படுகிறது.

“இந்தத் துறையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறையைப் போக்க அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள்,” என்று திரு கோங் தெரிவித்துள்ளார்.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகமான முதலீடுகள் அண்மைய ஆண்டுகளில் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஜோகூர் கட்டுமான நிறுவனங்கள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக த ஸ்டார் இணையச் செய்தி இதற்கு முன்னர் கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்