போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்த ஜோகூர் சுங்கத்துறை

1 mins read
15460236-4a8a-4655-be7d-e288184500a4
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் விலை 12.05 மில்லியன் ரிங்கிட் (S$3.66 மில்லியன்). - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: துறைமுகங்கள் வழியாகப் போதைப்பொருள் கடத்தும் கும்பலை ஜோகூர் அரச மலேசிய சுங்கத்துறை முறியடித்துள்ளது.

அக்டோபர் 1ஆம் தேதியன்று தஞ்சோங் பலேபாஸ் துறைமுகத்தில் இருந்த பேரளவிலான போதைப்பொருளை அது பறிமுதல் செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் விலை 12.05 மில்லியன் ரிங்கிட் (S$3.66 மில்லியன்).

துறைமுகத்தில் இருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலனில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அதே கொள்கலனில் 19 டன் உறைந்த இறால்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் விலை 735,000 ரிங்கிட்.

கொள்கலனில் இறால் மட்டுமே இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்தக் கொள்கலனைச் சோதித்துப் பார்த்தபோது அதில் வெள்ளைத் தூள் அடங்கிய 62 நெகிழிப் பைகள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்ததாக ஜோகூர் சுங்கத்துறை தெரிவித்தது.

அந்தக் கொள்கலன் இந்தியாவிலிருந்து மலேசியா வந்தடைந்ததாகவும் மலேசியாவிலிருந்து அமெரிக்காவின் மயாமி நகருக்கு அனுப்பிவைக்கப்பட இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

அனைத்துலக அமலாக்கப் பிரிவுகளுடன் இணைந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக மலேசிய சுங்கத்துறை தெரிவித்தது.

இந்த வழக்கு தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்