இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர் மாநிலம் 3 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஆண்டு வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அம்மாநில முதல்வர் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார். அதன் வரலாற்றில் இதுவே ஆக அதிக வருவாயாக இருக்கும்.
வியாழக்கிழமை (நவம்பர் 19) நிலவரப்படி, அம்மாநிலம் இவ்வாண்டில் ஏற்கெனவே 2.8 பில்லியன் ரிங்கிட் வருவாயைத் திரட்டியுள்ளதாக அவர் கூறினார்.
“இது இவ்வாண்டிற்கான தொடக்கக் கணிப்பில் 110 விழுக்காடாகும். கடவுள் அருளால், ஜோகூர் வரலாற்றில் முதன்முறையாக இவ்வாண்டு இறுதிக்குள் வருவாய் 3 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார். வியாழக்கிழமை மாநிலச் சட்டமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான ஜோகூர் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த வருவாய் உயர்வின் மூலம், கூடுதலான ஜோகூர் மக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு மாநில அரசாங்கத்தால் உதவ முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மாநில வரவுசெலவுத் திட்டத்தில் 2.328 மில்லியன் ரிங்கிட் உபரி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
“அடுத்த ஆண்டிற்கான உத்தேச வருவாய் 3.076 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது. மொத்தச் செலவினம் 3.074 பில்லியன் ரிங்கிட்டாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 2.328 மில்லியன் ரிங்கிட் உபரி இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டிற்கான மொத்தச் செலவினத்தில் ஏறத்தாழ 49.77 விழுக்காடு, அதாவது 1.53 பில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜோகூரின் மேம்பாட்டுக்கான மாநில அரசாங்கத்தின் கடப்பாடு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
