ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துள்ள மொத்தம் 12,710 மலேசியக் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தங்களது வாக்குகளை முன்கூட்டியே செலுத்தவுள்ளனர்.
அவர்களில் 12,067 பேர் முன்கூட்டியே நேரடியாக வாக்களிக்க இருப்பதாகவும், 643 பேர் அஞ்சல்மூலம் வாக்களிக்க இருப்பதாகவும் ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் அப் ரஹமான் அர்ஷத் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளார்.
அதற்காக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 64 வாக்குச்சாவடிகளில் 53 சாவடிகள் காவல்துறையினருக்கும் 11 சாவடிகள் ஆயுதப்படையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணிகளுக்காக 647 அதிகாரிகள், 2,806 சாதாரணநிலைக் காவலர்கள், 112 பொது ஊழியர்கள் உட்பட மொத்தம் 3,565 காவல்துறையினர் நியமிக்கப்படவுள்ளனர்.
அவர்கள் வாக்குச்சாவடிப் பாதுகாப்பு, வாக்குப்பெட்டிப் பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், குற்றத்தடுப்பு, சட்ட அமலாக்கம் போன்ற பணிகளை மேற்கொள்வர்.
தேர்தல் காலத்தில் சட்டத்தை மீறுபவர்கள் எவராயினும் அவர்கள்மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான, நியாயமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு அப் ரஹமான் எச்சரித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து, ஜனநாயக முறைக்குக் கட்டுப்பட்டு, அமைதியைப் பேணக் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

