ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் சனிக்கிழமை (ஜூலை 11) அன்று சிங்கப்பூரிலிருந்து பல வாக்காளர்கள் தாயகம் திரும்பியதால் ஜோகூர் பாருவுக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும் ஜோகூரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீராகவும் மிதமாகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஸ்குடாய், குலாய் சுங்கச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவற்றின் வழியாக நகருக்குள் நுழையும் வாகனங்கள் எவ்வித தடையுமின்றி சீராகச் சென்றன என்பது தெரியவந்தது.
காலையில் அதிக வாகனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முற்பகல் வரை வழக்கத்திற்கு மாறான போக்குவரத்து நெரிசல் எதுவும் ஏற்படவில்லை.
இதேபோன்று ஜோகூர் கடற்பாலத்திலும் போக்குவரத்து சீராக இருந்தது.
சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாரு நகருக்குள் நுழையும் சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்திற்கு அருகே உள்ள சாலைகளில் மதிய வேளையில் போக்குவரத்து மிதமான அளவில் இருந்தது.
அதேபோல், இரண்டாவது பாலத்திலும் போக்குவரத்து மிதமாகவே இருந்தது. வாகனங்கள் எவ்வித பெரிய இடையூறுமின்றித் தொடர்ந்து பயணித்தன.
முன்னதாக, சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் மாநிலத் தேர்தலுக்காக தாயகம் திரும்பும் வாக்காளர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இரு எல்லைச் சாவடிகளிலும் தங்களது அதிகாரிகள் முழுத் திறனுடன் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பு கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜோகூரில் போக்குவரத்து நெரிசல் எதுவும் ஏற்படவில்லை. ஜோகூர் மாநிலத் தேர்தலில் மொத்தம் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

