ஜோகூர் தேர்தல்: பெரிக்கத்தான் நே‌ஷனலுக்குப் படுதோல்வி

ஜோகூர் தேர்தல்: பெரிக்கத்தான் நே‌ஷனலுக்குப் படுதோல்வி

2 mins read
c3020380-7bcc-4841-8c38-53498447df12
முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினின் தலைமையில் பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்டணி போட்டியிட்டது. - கோப்புப் படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்டணி படுதோல்வியடைந்துள்ளது.

தேர்தலில் முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினின் தலைமையிலான அக்கூட்டணி போட்டியிட்ட 33 தொகுதிகளில் ஒன்றில்கூட அது வெல்லவில்லை. பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 16 பேரும் பாஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேரும் மலேசிய இந்திய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஐவரும் பெரிக்கத்தான் நே‌ஷனலின் சார்பில் ஜோகூர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் பெரிக்கத்தான் நே‌ஷனல், 2022ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற புக்கிட் கேப்போங், மகாராணி எண்டாவ் ஆகிய முன்று தொகுதிகளில் தோல்வியடைந்தது தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளில் தெரியவந்தது.

பாஸ்

தோல்வியைத் தழுவிய பிறகு மக்களின் தீர்ப்பைத் தாங்கள் மதிப்பதாக பெரிக்கத்தான் நேஷனலில் இடம்பெற்றுள்ள பாஸ் கட்சி கூறியுள்ளது.

மலேசியாவின் 16வது பொதுத் தேர்தலுக்கு முன்பு தங்களை வலுப்படுத்திக்கொள்ளப் போவதாகவும் ஜோகூர் மாநிலத்துக்காகப் பொறுப்பு வகிக்கும் அக்கட்சியின் மாஃபோட்ஸ் முகம்மது உறுதியளித்துள்ளார். ஜோகூர் முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸியின் தலைமையில் தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய முன்னணி கூட்டணிக்கு அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

முதலை இழந்த பெர்சாமா

இந்நிலையில், புதிதாகத் தொடங்கப்பட்ட பெர்சாமா கட்சியின் சார்பில் ஜோகூர் தேர்தலில் போட்டியிட்ட எல்லா வேட்பாளர்களும் முதலை இழந்தனர்.

பெர்சாமா வேட்பாளர்கள் மூன்றிலிருந்து ஆறு விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றதாக அக்கட்சியின் தலைவர் ரஃபிஸி ராம்லி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அறிக்கை மூலம் இதனைத் தெரிவித்தார். முதலை இழக்காதிருக்க வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 12.5 விழுக்காட்டு வாக்குகளை வெற்றிருக்கவேண்டும்.

குறைந்தது 15 விழுக்காட்டு வாக்குகளைப் பெறவேண்டும் என்ற கட்சியினுள் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கை பெர்சாமா அடையவில்லை என்பதை அவர் தெரிவித்தார். பல்வேறு வயதுப் பிரிவினர், சமூகங்களுக்கிடையே தேசிய முன்னணிக்கு மகத்தான ஆதரவு இருந்தது இந்த நிலைக்குக் காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் திரு ரஃபிஸி சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாதேர்தல்