ஜோகூர் தேர்தல்: இலவசப் பேருந்து சேவை, ரயில்களில் கூடுதல் இருக்கைகள்

ஜோகூர் தேர்தல்: இலவசப் பேருந்து சேவை, ரயில்களில் கூடுதல் இருக்கைகள்

2 mins read
ec60a6e6-f13f-4ef7-8336-7bb97f0f1502
‘கேடிஎம்பி’ நிறுவனம் ஜூலை 10 முதல் 12 வரை தெற்கு நோக்கிய தனது மின்சார ரயில் சேவைகளில் இருக்கைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது. - கோப்புப்படம்: ஷின்மின்

ஜோகூர் பாரு: மலேசியாவில் ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரிலிருந்து 240 வாக்காளர்களை அழைத்துச்செல்லும் வகையில் அரசு சாரா அமைப்பு ஒன்று இலவசமாக ஆறு பேருந்துகளை இயக்கவிருக்கிறது.

ஜோகூரில் ஜூலை 11ஆம் தேதி சனிக்கிழமை சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில், நான்கு பேருந்துகள் கோலாலம்பூரிலிருந்தும், மற்ற இரண்டு பேருந்துகள் சிங்கப்பூர் வாக்காளர்களுக்காக சுல்தான் இஸ்கந்தர் சுங்கம், குடிநுழைவு, தனிமைப்படுத்தல் (சிஐகியூ) வளாகத்திலிருந்தும் புறப்படும் என்று ‘ஸ்டேசன் பெமண்டாவன் ராக்யாட்’ அமைப்பின் பேராளர் யோங் சுய் வென் கூறினார்.

அப்பேருந்துகள் தங்காங், மூவார், பத்து பகாட், பெக்கான் நானாஸ், செகாமட், லாபிஸ், குளுவாங், ஆயர் ஈத்தாம், கூலாய் உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும்.

கோலாலம்பூரிலிருந்து ஜோகூருக்கான பேருந்துகள் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குப் புறப்படும். அதே நேரத்தில் ‘சிஐகியூ’ வளாகத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கும், சனிக்கிழமை காலை 9 மணிக்கும் புறப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தங்கள் அமைப்பு 2018 ஆம் ஆண்டிலிருந்தே இவ்வாறு இலவசப் பேருந்துகளை இயக்கிவருவதாகவும், வெளிமாநிலங்களில் வாழும் ஜோகூர் வாக்காளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரயில்களில் இருக்கைகளின் எண்ணிக்கை இரட்டிப்பு

இதனிடையே, ஜோகூர் தேர்தலையொட்டி அதிகரித்துள்ள தேவையை ஈடுகட்டும் வகையில், ‘கேடிஎம்பி’ நிறுவனம் ஜூலை 10 முதல் 12 வரை தெற்கு நோக்கிய தனது மின்சார ரயில் சேவைகளில் இருக்கைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது.

கேஎல் சென்ட்ரல் - ஜேபி சென்ட்ரல் வழித்தடத்தில் கூடுதலாக 7,560 இருக்கைகள் சேர்க்கப்பட்டு, மொத்த கொள்ளளவு 15,120 இருக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கேடிஎம்பி தலைமை நிர்வாக அதிகாரி அஸ்லான் ஷா அல் பக்ரி தெரிவித்துள்ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதுபோல, ஜோகூர் மக்கள் எளிதாகச் சென்று வாக்களிக்க ஏதுவாக, அம்மூன்று நாள்களிலும் கிம்மாஸ் - ஜேபி சென்ட்ரல் வழித்தடத்தில் இருக்கை வசதி 630லிருந்து 4,410ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வழித்தடத்திற்கான பயணச்சீட்டுகள் விரைவாக விற்றுத் தீர்ந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை உச்ச நேரத்திற்கான ரயில் பயணச்சீட்டுகள் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்