ஜோகூர் தேர்தலில் மக்கள் திரும்பி வந்து வாக்களிக்க வேண்டும்: அன்வார்

ஜோகூர் தேர்தலில் மக்கள் திரும்பி வந்து வாக்களிக்க வேண்டும்: அன்வார்

2 mins read
86be1a49-269a-4eb1-8eca-6477a14208fa
ஜோகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரில் வேலை செய்யும் ஜோகூர்வாசிகள் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படங்கள்: மதர்ஷிப்

முவார்: ஜோகூர் மாநிலத்திற்கு வெளியே, குறிப்பாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஜோகூர்வாசிகள், தாயகம் திரும்பி வந்து மாநிலத் தேர்தலில் வாக்களிக்குமாறு பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

பிகேஆர் கட்சித் தலைவருமான பிரதமர் அன்வார், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், ஜோகூரை மத்திய அரசுடன் இணைப்பதற்கும் கூட்டணி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறினார்.

மத்திய அரசாங்கத்தின் அதே திசையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு மாநில நிர்வாகம், சுமுகமான ஒத்துழைப்பைச் சாத்தியமாக்கும், வளர்ச்சித் திட்டமிடலை எளிதாக்கும் மற்றும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவி சென்றடைவதை உறுதி செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.

“ஜோகூர் மாநிலத் தேர்தல் ஏன் முக்கியமானது என்று நீங்கள் கேட்டால், ஜோகூர் மாநிலம், மத்திய அரசுடன் இணைய வேண்டும் என்பதே அதற்குக் காரணம்,” என்றார் அவர்.

“இது பேச்சுவார்த்தை நடத்துவதையும், ஒருவருக்கொருவர் உதவுவதையும், விஷயங்களைப் பற்றி விவாதிப்பதையும் எளிதாக்கும். ஜோகூர் மலேசியாவின் ஒரு பகுதியாகும். மேலும் நாம் என்ன செய்தாலும் அது மக்களின் நலனுக்காகவே இருக்கும்,” என்று அவர் திங்கட்கிழமை (ஜூன் 15) இரவு புக்கிட் பாக்ரியில் நடந்த பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார்.

வளர்ச்சி முன்னெடுப்புகளை மிகவும் திறம்படச் செயல்படுத்தி, அவற்றை மக்களுக்குக் கண்கூடான பலன்களாக மாற்றுவதை உறுதிசெய்ய, ஜோகூரில் பக்கத்தானுக்கு ஒரு வலுவான மக்கள் ஆதரவு தேவை என்று அன்வார் கூறினார்.

மேலும், ஜோகூர் மாநிலம் மலேசியாவின் ஒரு முக்கியமான பகுதி என்பதையும், மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசுடன் நெருங்கிய ஒத்துழைப்பு தேவை என்பதையும் கருத்தில் கொண்டு, ஜோகூரின் தலைவர்கள் தைரியமாகவும், திறமையாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், அரசாங்கத்தின் மக்கள் நல முன்னெடுப்புகள் தேர்தல் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டுகளை அன்வார் நிராகரித்தார். பக்கத்தான் கூட்டணி அரசாங்கத்தை அமைத்த உடனேயே உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றும் அவர் கூறினார்.

அரசியல் ஆதாயத்திற்காக இன உணர்வுகளைத் தொடர்ந்து தூண்டி, சமூகங்களிடையே அவநம்பிக்கையை விதைக்கும் அரசியல்வாதிகளின் பேச்சில் வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது என்றும் அன்வார் நினைவூட்டினார்.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்அன்வார்மத்திய அரசுஒத்துழைப்பு