பெட்டாலிங் ஜெயா: ஜோகூர் மாநிலத்தின் 16வது சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூலை 11) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
காலை 9 மணி வரை 7.97 விழுக்காட்டு வாக்காளர்கள், அதாவது 213,878 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,076 வாக்குப்பதிவு மையங்களும் 4,889 வாக்குப்பதிவு துணை மையங்களும் காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.
மொத்தம் 56 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2.7 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். வாக்குப்பதிவு 70 விழுக்காடு வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நீடிக்கும். அதன் பின்னர், வாக்குச்சீட்டுகள் செலுத்தப்பட்ட 24,677 வாக்குப் பெட்டிகளும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.
இரவு 10 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முழுமையாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக 14 நாள்கள் நீடித்த பிரசாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நள்ளிரவு நிறைவுபெற்றது.
வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற மாநிலம் முழுவதும் 43,036 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரம்லான் ஹாருன் பார்வையிட்டார்.
தேர்தல் சுமுகமாகவும் முறையாகவும் நடப்பதை உறுதிசெய்ய ஜோகூர் பாருவில் உள்ள நான்கு வாக்களிப்பு மையங்களுக்கு அவர் சென்றார்.

