ஜோகூர் பாரு: மலேசிய அமைச்சரவை, ஜோகூர் பாருவில் மேம்பால விரைவு ரயில் திட்டத்திற்காக 10 பில்லியன் ரிங்கிட் ($3.2 மில்லியன்) நிதியை ஒதுக்கியிருக்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது நோக்கம். அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் அந்தத் தகவலை வெளியிட்டார்.
கணிசமான நிதி சம்பந்தப்பட்டிருப்பதால், திட்டம் குறித்து விவாதிக்க மத்திய அரசாங்கத்திற்கு அவகாசம் தேவைப்பட்டதாகத் திரு லோக் சொன்னார்.
“அமைச்சரவை, மேம்பால விரைவு ரயில் திட்டத்திற்காக 10 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. நாங்கள் சற்று மெதுவாய்ச் செயல்பட்டதாகச் சிலர் கூறினார்கள். திட்டத்தை மறுஆய்வு செய்யக் கூடுதல் நேரம் தேவைப்பட்டது. திட்டத்திற்கான தொகை, சிறியதன்று,” என்று ஜோகூர் பாருவில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பான் மாநாட்டில் அவர் கூறினார்.
முன்னதாக, மேம்பால விரைவு ரயில் திட்டத்தைத் தாமதாகத் தொடங்குவதால் ஜோகூர் பாருவில் போக்குவரத்து நெரிசல் மோசமடையக்கூடும் என்று மாநில முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசல் குறித்த அக்கறை நிலவும் வேளையில், அதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் எதுவும் இன்னும் தென்படவில்லை என்றார் அவர். திட்டம் ஈராண்டுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் காத்திருப்பதாக அமைச்சர் லோக் சொன்னார்.
அதேநேரம், சிங்கப்பூர்-ஜோகூர் விரைவு ரயில் திட்டப் பணிகள் 90 விழுக்காடு நிறைவுபெற்றுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2027) அது செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது போக்குவரத்து அதிகரிக்கக்கூடும். அதைச் சமாளிக்கவும் ஏற்பாடுகள் தயாராய் இருப்பதாகத் திரு லோக் குறிப்பிட்டார்.
விரைவு ரயில் திட்டம், ஜோகூரின் புக்கிட் சாகருக்கும் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த்திற்கும் இடையிலான பயண நேரத்தை ஏறக்குறைய ஐந்து நிமிடமாகக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. திட்டம் இயங்கும்போது, ஒரு திசையில் மணிக்குப் பத்தாயிரம் பயணிகள் வரை செல்லமுடியும்.

