மத்திய கிழக்குப் போரால் ஜோகூரில் உணவு விலைகள் உயரக்கூடும்: கடைக்காரர்கள்

மத்திய கிழக்குப் போரால் ஜோகூரில் உணவு விலைகள் உயரக்கூடும்: கடைக்காரர்கள்

2 mins read
fae51f42-5681-46a5-ac62-3afcc3e6b99f
மூலப் பொருள்களின் விலை அதிகரிக்கும்போது உணவு விலையின் விலையும் உயர்த்தப்படும் என்று ஜோகூர் உணவு, பானக் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். - படம்: ஹெப்பிகாவ்

ஜோகூர்: மத்திய கிழக்குப் போரால் மலேசியாவின் ஜோகூரில் உள்ள உணவு, பானக் கடைகள் உணவு விலைகளை உயர்த்தக்கூடும் என்று தெரிவித்துள்ளன.

அனைத்துலக அளவில் தொடரும் நிச்சயமற்ற பொருளியல் சூழலால் செயல்பாட்டுச் செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. எனவே, இனிவரும் வாரங்களில் உணவு விலைகள் உயர்வதைக் காண முடியும் என்று உணவு, பானக் கடை உரிமையாளர்கள் கூறினர்.

போர் தொடங்கியபோது ஏற்பட்ட பாதிப்புகளையும் மீறி உணவு விலையை உயர்த்தாமல் வைத்திருந்ததாகக் கூடுமானவரை முயன்றதாகக் கடை உரிமையாளர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

தற்போதைய நிலவரப்படி உணவு, பானக் கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் விலைகள் மட்டும் அதிகரித்துள்ளதாகக் கடைக்காரர்கள் பகிர்ந்துகொண்டனர்.

மூலப் பொருள்களின் விலையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை. ஆனால், கூடிய விரைவில் அவற்றின் விலையும் அதிகரிக்கும்போது உணவு விலைகளை உயர்த்தித்தான் ஆகவேண்டும் என்றனர் உரிமையாளர்கள்.

இந்நிலையில், எரிபொருள் விலையில் உள்ள மாற்றங்களையும் கடை உரிமையாளர்கள் சமாளிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது 200 லிட்டர் எரிபொருளுக்கு மட்டும் வழங்கப்படும் ரோன்95 மானியம், உணவு, பானக் கடைகளைப் பெரியளவில் பாதித்துள்ளது. எரிபொருளுக்கான கூடுதல் கட்டணத்தையும் கடைகளே ஏற்றுள்ளதாக உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

எரிபொருள் விலையை அணுக்கமாகக் கண்காணித்துவருவதாகக் கூறிய கடைக்காரர்கள் சிலர், பலசரக்குப் பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

கூலாய், ஜோகூர் ஆகியவற்றில் உணவகங்களை நடத்துவோரில் சிலர் உணவு விலைகளை அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றனர்.

எனினும், உணவு விலைகள் ஒருசில காசு உயரும் என்ற அவர்கள், மே மாதத்துக்குள் அது நடப்புக்குவரக்கூடும் என்றனர்.

வாடிக்கையாளர்கள்மேல் விலை சுமையைச் சுமத்துவதற்குப் பதிலாக மாற்றுவழிகளில் அதிகரிக்கும் செலவினங்களைச் சமாளிக்க உணவு, பானக் கடைக்காரர்கள் முயல்வதாகப் பகிர்ந்துகொண்டனர்.

இறுதியில் வேறு வழி இல்லாவிட்டால் உணவு விலை அதிகரிக்கவே செய்யும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்