இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் உடற்குறையுள்ளோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று ஜோகூர் மாநில அரசு உறுதி அளித்துள்ளது.
சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் சமமான வேலை வாய்ப்பு வழங்க ஜோகூர் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாக ஜோகூர் மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுக் குழுவின் தலைவர் கைரின் நிஷா இஸ்மாயில் தெரிவித்தார்.
சமூகத்தில் யாரும் பின்தங்கிவிடக்கூடாது என்பதே இலக்கு என்றார் அவர்.
“பல்வேறு வேலை வாய்ப்பு திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளியலுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க உடற்குறையுள்ளோருக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஜோகூரின் வலுவான பொருளியல் மூலம் கிடைக்கும் வருமானம் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்,” என்று திருவாட்டி கைரின் நிஷா தெரிவித்தார்.
இதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்ள மாநில மக்கள் நல வாரியம், ஜோகூர் குடும்ப மேம்பாட்டு அறநிறுவனம் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார் அவர்.
ஜோகூர் மாநிலத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் அது உடனடியாக, சுமுகமான முறையில் அமல்படுத்தப்படும் என்றும் திருவாட்டி கைரின் நிஷா கூறினார்.