குலுவாங்: ஜோகூரில் பழைய வெடிகுண்டை அப்புறப்படுத்தச் சென்ற காவலர்கள் இருவர் திடீர் என்று நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தனர்.
அந்தச் சம்பவம் குலுவாங் மாவட்டத்தில் உள்ள தாமான் ஸ்ரீலம்பாக்கில் நிகழ்ந்தது.
ஜாலான் தாபாவில் பழைய வெடிகுண்டு ஒன்று கிடப்பதாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) காலை 8.50 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக குலுவாங் மாவட்ட தலைமை உதவி ஆணையாளர் பஹ்ரின் முகம்மது நோஹ் கூறினார்.
“உடனடியாக அந்த இடத்துக்கு ஜோகூர் மற்றும் குலுவாங் காவல்துறைப் பிரிவுகளில் இருந்து வெடிகுண்டு அப்புறப்படுத்தும் குழு அனுப்பி வைக்கப்பட்டது.
“பிற்பகல் 2.20 மணிவாக்கில் அந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதாக மலேசிய அவசரநிலை உதவிச் சேவை மையத்திலிருந்து காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) கூறினார்.
ஜோகூரின் வெடிகுண்டு அப்புறப்படுத்தும் குழுவைச் சேர்ந்த இருவர் வெடிகுண்டை அழிக்க தயாராகிக் கொண்டு இருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக திரு பஹ்ரின் தெரிவித்தார்.
“வெடிகுண்டை அப்புறப்படுத்தும் பணி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்துகொண்டு இருந்தது. திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய காவலர்கள் மண்ணுக்குள் புதைந்து காயமடைந்தனர்.
“உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்றும் அவர் கூறினார்.