ஜோகூர் பாரு: 20 மில்லியன் ரிங்கிட் (S$6மி.) பிணைத் தொகைக்காக தம் சொந்த கணவரையே கடத்த சதித்திட்டம் தீட்டிய 57 வயது இல்லத்தரசி மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நான்கு பேரப்பிள்ளைகளுக்குப் பாட்டியான சான் வான் கூய், தம் 59 வயது கணவரைக் கடத்த தொழிலதிபர் சோங் ஷி மிங், 46, வியட்னாமிய நாட்டவர்கள் லுவோங் வான் துங், 39, டிரான் வான் சுங், 29, ஆகிய மூவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார்.
அக்டோபர் 13ஆம் தேதி காலை 5 மணியளவில் ஜோகூர் பாருவில் ஜாலான் ஸ்ட்ரெய்ட்ஸ் வியூ அருகே உள்ள வீட்டில் இந்தக் குற்றம் புரியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற விசாரணையின்கீழ் வருவதால் குற்றச்சாட்டை எதிர்த்து முறையீடு செய்யப்படவில்லை.
தம் கட்சிக்காரருக்குப் பிணை வழங்கக் கோரி, தற்காப்பு வழக்கறிஞர் ஜக்ஜிட் சிங் பண்ட் சிங் வாதிட்டார்.
ஆனால், பிணை வழங்க மறுத்த நீதிபதி ஹஸீலியா முகம்மது, வழக்கை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


