ஜோகூர்: சமூக நலத்திட்டங்களுக்கு 170 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்க 24 மணி நேரத்திற்குள் வணிக உரிமம்

ஜோகூர்: சமூக நலத்திட்டங்களுக்கு 170 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

2 mins read
b1a9082e-2c7f-4b23-b87a-009ade88dc0c
ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் திங்கட்கிழமை (மே 4) உரையாற்றிய அம்மாநில முதலமைச்சர் ஆன் ஹபீஸ் நலத்திட்டங்களுக்கான நிதி அதிகரிக்கப்படுவதாகக் கூறினார். - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் பொருளியல் வலுவடைந்து வரும்நிலையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அம்மாநில முதலமைச்சர் ஆன் ஹபீஸ் காசி அறிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஏப்ரல் வரை மாநில வருவாய் 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 307 ரிங்கிட் மில்லியன் அதிகம்.

இந்த உபரி வருவாயைக் கொண்டு வசதி குறைந்தோருக்கு உதவும் ‘பந்துவான் காசி ஜோகூர்’ .சமூகத் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்காக 138 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் முதியவர்கள், இல்லத்தரசிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 600,000 பேர் பயனடைவர்.

அத்துடன், மானிய விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் ‘ஜுவாலான் காசி ஜோகூர்’ திட்டத்திற்கான நிதி 45.4 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 336 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இதனால் 750,200 குடும்பங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இத்திட்டத்திற்காக இவ்வாண்டு 15.4 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவு, கோரிக்கையைத் தொடர்ந்து கூடுதலாக ரி. 30 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் திங்கட்கிழமை (மே 4) உரையாற்றிய ஆன் ஹபீஸ் கூறினார்.

மேலும், வீடமைப்பு வசதிகளை மேம்படுத்த ‘பெருமஹான் காசி ஜோகூர்’ திட்டத்தின் கீழ் 137.8 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் மாநிலம் பொருளியல் ரீதியாக வளரும் வேளையில், அந்த வளர்ச்சியில் மக்கள் அனைவரும் பங்கெடுத்துப் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று முதலமைச்சர் ஆன் ஹபீஸ் தெரிவித்தார்.

24 மணி நேரத்திற்குள் வணிக உரிமம்

ஜோகூரை மலேசியாவின் முதன்மையான பொருளியல் மையமாக மாற்றும் நோக்கில், வணிக உரிமங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் ஒப்புதல் அளிக்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

மாநிலத்தில் 16 உள்ளாட்சி அமைப்புகளிலும் உரிம நடைமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் குறைந்த ஆபத்துள்ள வணிகங்களுக்கு இனி ஒரு நாளிலேயே அனுமதி வழங்கப்படும் என்றும் மாநில வீடமைப்பு, உள்ளாட்சித் துறைத் தலைவர் முகமட் ஜாப்னி ஷுகூர் தெரிவித்தார்.

தற்போது மாநிலத்தின் முதலீடு 110 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதோடு, 6.4 விழுக்காடு பொருளியல் வளர்ச்சியையும் உறுதிசெய்துள்ளது என்றார் அவர்.

ஜோகூர் அறிவார்ந்த நகர் பெருந்திட்டம் 2030ன் கீழ், மின்னிலக்கமாக்கல் முன்னெடுக்கப்படுகிறது. இது தொழில்களும், வணிகங்களும் விரைந்து வளர்ச்சி காண உதவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்