ஜோகூர் பாரு: மின்சிகரெட் வர்த்தகத்தில் ஈடுபடுவோரைப் பிடிக்கும் முயற்சியில் ஜோகூர் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
ஜோகூர் பாருவில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் சிலர் வெளிப்படையாகவே மின்சிகரெட்டுகளை விற்று வருவது தெரிய வந்ததையொட்டி இந்நிலை உருவாகியுள்ளது.
ஜோகூரில் மின்சிகெரட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் சில வர்த்தகர்கள் அவற்றை விற்று வருவதாக மாநில சுகாதார, சுற்றுச்சுழல் குழுத் தலைவர் லிங் டியென் சூன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அண்மையில் ஜோகூர் மாநில சுகாதாரப் பிரிவு, கடைத்தொகுதி ஒன்றில் நடத்திய முறியடிப்பு நடவடிக்கையில் 1,900க்கும் அதிகமான மின்சிகரெட் தொடர்பான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“ஒருமுறை பயன்படுத்தப்படும் மின்சிகரெட்டுகள், மின்சிகரெட் சம்பந்தப்பட்ட பொருள்கள், மின்சிகரெட்டுகளில் சேர்க்கப்படும் திரவிய வகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் அடங்கும்.
“இளையர்களை ஈர்க்கும் வகையில் அத்தகைய பொருள்கள் பொதுவாக பலவிதமான திரவிய ‘சுவை’களில் நவீன வடிவமைப்பு கொண்ட பொட்டலங்களில் வருகின்றன,” என்று திரு லிங் கூறினார்.
கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து ஜோகூரில் மின்சிகரெட் தடை நடப்பில் இருந்து வருகிறது.
அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நாடு முழுவதும் மின்சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கத் தமது அமைச்சு திட்டமிட்டு வருவதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஸுகிஃப்லி அகமது கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி கூறியிருந்தார்.