ஜோகூர் பாரு: நோன்புப் பெருநாள் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறை 7,000க்கும் மேற்பட்ட கடிதங்களை சம்பந்தப்பட்டோருக்கு அனுப்பியுள்ளது.
மார்ச் 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலான சிறப்பு நடவடிக்கை காலத்தின்போது தமது துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 23,715 வாகனங்களைச் சோதனை செய்ததாக அந்தத் துறையின் இயக்குநர் அஸ்மில் ஸைனல் அட்னான் தெரிவித்துள்ளார்.
அந்த நாள்களில் பதிவான குற்றச் சம்பவங்களை குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்தச் சோதனையின்போது 7,592 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 1,619 குற்றங்கள், அதாவது 22.6 விழுக்காட்டுக் குற்றங்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது தொடர்பானவை.
முறையான சாலை வரி செலுத்தாமல் அல்லது காலாவதியான சாலை வரி உரிமத்தைப் புதுப்பிக்காமல் இருந்ததற்காக 1,416 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. வாகனக் காப்புறுதி இன்றி வாகனம் ஓட்டியதாக 1,036 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.
தேய்ந்த சக்கரங்கள், பழுதடைந்த வேகநிறுத்தக் கருவிகள் (பிரேக்), உடைந்த விளக்குகள் போன்ற தொழில்நுட்பக் குற்றங்களுக்காகவும் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
அவற்றுடன், வாகன வரிசையின் இடையே வலுக்கட்டாயமாக நுழைந்தது, இருக்கை வார் அணியாமல் வாகனம் ஓட்டியது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியது, வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
சோதனையின்போது 106 வாகனங்கள் சாலைப் போக்குவரத்துக்குப் பாதுகாப்பற்றவை என்று கண்டறியப்பட்டு, பயன்பாட்டில் இருந்து அவை அகற்றப்பட்டதாகவும் திரு அஸ்மில் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

