ஜோகூர்-கோலாலம்பூர் விரைவு ரயில் சேவை: 30% கட்டணக் கழிவு

2 mins read
8d3b38aa-a8e9-4a5b-ae33-e2d16eb881e2
ஜோகூரில் உள்ள பாசிர் கூடாங் ரயில் நிலையம். தற்போது சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படும் நிலையத்தில் விரைவில் பயணிகள் ரயிலும் வந்துசெல்லும். - படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் பாருவுக்கும் தலைநகர் கோலாலம்பூருக்கும் இடையிலான மின்சார விரைவு ரயில் சேவை வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) தொடங்கவுள்ளது.

அதனை முன்னிட்டு சிறப்புச் சலுகையாக டிசம்பர் 12 முதல் ஜனவரி 11 வரையில் ஒரு மாதகாலத்திற்கு 30 விழுக்காட்டு கட்டணக்கழிவை மலேசிய தேசிய ரயில் போக்குவரத்துக் கழகம் (KTMB) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திங்கட்கிழமையன்று கழகம் ஓர் அறிக்கை வெளியிட்டது.

அந்தக் கட்டணச் சலுகை கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஜோகூர் பாரு சென்ட்ரல் நிலையத்துக்குச் சென்று மீண்டும் கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையம் திரும்பும் சேவைகளுக்கான பயணங்களுக்கு வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கழகம் விளக்கியது.

ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்கோ அல்லது தலைநகரிலிருந்து ஜோகூருக்கோ செல்லும் ஒருவழி பயணக் கட்டணம் வழக்கமாக S$26லிருந்து (RM82) தொடங்குகிறது.

கட்டணங்களுக்குச் சிறப்பு சலுகைகளை வழங்கும் ‘ஜேபிபெஸ்ட்’ (JBBEST) குறியீட்டை மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கழகத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி நிஸாம் முகம்மது அமின் அறிவுறுத்தினார். அந்தக் குறியீட்டைக் கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, 5,000 சலுகைக் கட்டணங்களைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பொதுப் போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்த வகை செய்வதன் மூலம் சிங்கப்பூரர்கள் உள்பட அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றார் அவர். ஜோகூரின் சுற்றுலாத் துறையும் பொருளியலும் அதன்வழியாக வளர்ச்சியடையும் எனவும் திரு நிஸாம் கூறினார்.

“ஆண்டு இறுதி விடுமுறையை முன்னிட்டு பல மலேசியர்கள் ஜோகூருக்கு வந்து செல்வர். ஜோகூர்வாசிகளும் மின்ரயில் சேவையைப் பயன்படுத்தி நாட்டின் பல பகுதிகளுக்குச் சலுகைக் கட்டணத்தில் எளிதாகச் செல்லலாம்,” என்றார் திரு நிஸாம்.

மேல்விவரங்களுக்கு மலேசிய தேசிய ரயில் போக்குவரத்துக் கழகத்தின் www.ktmb.com.my இணையப் பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்