பெய்ஜிங்: ஜோகூர் பாருவுக்கும் சீனாவின் குன்மிங்குக்கும் இடையே நேரடி விமானச் சேவைகள் இயங்கவுள்ளன.
இது, ‘மலேசியாவுக்கு வருகை தாருங்கள் 2026’ (வஎம்2026) இயக்கத்துக்கு ஆக்ககரமான வகையில் பங்களிக்கும் என்று குன்மிங்குக்கான மலேசிய தூதரான முகம்மது அக்மல் அப்துல் வஹாப் கூறியுள்ளார்.
சீனாவின் யுனான் மாநிலத் தலைநகரான குன்மிங்குக்கு மலேசியாவிலிருந்து கூடுதல் வழிகளில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, மலேசியா-சீனா உறவை மக்கள் தொடர்புகளையும் வலுவடையச் செய்யும் என்று அவர் சொன்னார். டிசம்பர் 14ஆம் தேதி ஜோகூர்-குன்மிங் நேரடி விமானச் சேவைகள் தொடங்கும்.
“பயண வழிகள் தொடர்ந்து அதிகரித்து வருவது சுற்றுப்பயணிகளை ஈர்ப்பது மட்டுமின்றி வர்த்தகம், முதலீடு, கல்வி உள்ளிட்ட துறைகளுக்கும் மெருகூட்டும்,” என்று திரு முகம்மது அக்மல், பெர்னாமா செய்தி நிறுவனம் தொடர்புகொண்டபோது கூறினார்.
ஏர்ஏஷியா மலேசியா, ஜோகூர் பாரு-குன்மிங் விமானச் சேவையைத் தொடங்குவதாக அறிவித்தது.
தற்போது மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் குன்மிங்குக்கும் இடையே வாரந்தோறும் 14 நேரடி விமானச் சேவைகள் இயங்கி வருகின்றன. இனி அவற்றோடு ஜோகூர் பாருவுக்கும் குன்மிங்குக்கும் இடையே வாரந்தோறும் மூன்று நேரடி விமானச் சேவைகள் வழங்கப்படும்.
2023ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டு சீனாவிலிருந்து மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 123 விழுக்காடு கூடியது.

