ஜோகூர் பாரு: மலேசியாவின் நிலவழி குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளின் தானியங்கி வாயில்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு முழுமையாகச் சரிசெய்யப்பட்டுவிட்டதாக ஜோகூர் மாநில நிர்வாக மன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மின்வாயில்களும் தற்போது வழக்கம்போல இயங்குவதாக ஜோகூர் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்பு குழுத் தலைவர் முகமது ஃபஸ்லி முகமது சாலே கூறினார்.
இருப்பினும் ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட 48 மணி நேரத்துக்கு மின்வாயில்களின் சேவைத் தடைக்கான காரணம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
ஜோகூரின் பங்குனன் சுல்தான் இஸ்கந்தர் சுங்கச்சாவடிகள், குடிநுழைவு, சோதனைச் சாவடிகளில் (பிஎஸ்ஐ) 39 மின்வாயில்கள் வழியாக மலேசியாவுக்குள் சென்று 29 வாயில்கள் வழியாக அங்கிருந்து வெளியேறலாம்.
இரண்டாம் இணைப்பில் உள்ள சுல்தான் அபு பாகார் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் மொத்தம் 12 மின்வாயில்கள் உள்ளன.
மின்வாயில்களில் ஏற்பட்ட கோளாற்றால் வெளிநாட்டுக் கடப்பிதழ் உள்ள பயணிகள் மட்டும் பாதிக்கப்பட்டனர்.
மலேசியக் கடப்பிதழை வைத்திருந்த பயணிகளோ, கார், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றில் பயணம் செய்தவர்களோ பாதிக்கப்படவில்லை. அவர்கள் மின்வாயில்களைப் பயன்படுத்துவது இல்லை.
பேருந்துகள் வழியாக மலேசியாவுக்குச் சென்றுவருவோரே பெரும்பாலும் மின்வாயில் சேவைத் தடங்களால் பாதிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜனவரி 10ஆம் தேதி குடிநுழைவுச் சோதனைகளைக் கடக்க வெளிநாட்டினருக்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் எடுத்ததாக ‘த ஸ்டார்’ நாளேடு தெரிவித்தது.
மலேசிய எல்லைக் கட்டுபாட்டு, பாதுகாப்பு அமைப்பு குடிநுழைவுச் சாவடிகளில் இருந்த கூட்டத்தைச் சமாளிக்க வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. தொண்டூழியர்களைப் பணியில் ஈடுபடுத்தியது, மலேசியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் வெவ்வேறு சோதனைத் தடங்களைச் செயல்படுத்தியது ஆகியவை அவற்றுள் அடங்கும்.
வார இறுதிகளில் பிஎஸ்ஐ சோதனைச் சாவடிகள் வழியாக 180,000க்கும் அதிகமான வெளிநாட்டினர் கடந்துசெல்கின்றனர்.

