தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர்: வெட்டுக்கத்தியால் காவலர்களைத் தாக்கிய வெளிநாட்டவர் சுட்டுக் கொலை

2 mins read
cf59e032-a959-4219-b328-878069abe045
சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர் கடந்த 2024ஆம் ஆண்டுமுதல் கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. - படம்: தி ஸ்டார்

குளுவாங்: மலேசியாவின் ஜோகூர் மாநிலம், கம்போங் பலெம்பாங்கில் வியாழக்கிழமை (மே 22) வெட்டுக்கத்தியால் காவலர்களைத் தாக்கிய இந்தோனீசிய ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதிகாலை 3.45 மணியளவில் சந்தேகத்திற்குரிய வகையில் அந்த ஆடவர் நடமாடியதை ஜோகூர் காவல்துறைக் குற்றப் புலனாய்வுக் குழுவினர் கண்டனர் என்று ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.

பதிவெண் பலகை இல்லாத மோட்டார்சைக்கிளை அவர் ஓட்டிச் சென்றதாகவும் அதனை நிறுத்தும்படி அதிகாரிகள் கூறியபோதும் அவர் நில்லாமல் சென்றதாகவும் திரு குமார் கூறினார்.

இருப்பினும், செம்பனைத் தோட்டத்தை நோக்கிச் சென்ற செப்பனிடப்படாத சாலையில் அவரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக அவர் சொன்னார்.

காவல்துறை அதிகாரிகள் சோதனையிட முயன்றபோது, திடீரென அந்த ஆடவர் வெட்டுக்கத்தியில் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகத் திரு குமார் கூறினார்.

“அவ்வதிகாரியின் சட்டைக் கைப்பகுதியை வெட்டுக்கத்தி தாக்கியது. அவரைச் சரணடையுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டபோதும், அவர் அதிகாரிகளைத் தொடர்ந்து மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினார்,” என்று திரு குமார் விவரித்தார்.

அதனையடுத்து, தற்காப்பிற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் காவல்துறை அந்த ஆடவரைச் சுட்டது என்றும் அவர் சொன்னார்.

சம்பவ இடத்திலேயே அந்த ஆடவர் மாண்டுபோனார்.

அந்த ஆடவரிடம் செல்லத்தக்க எந்த ஆவணங்களும் இல்லாததால் அவரை அடையாளம் காண முடியவில்லை என்றும் திரு குமார் தெரிவித்தார்.

அவரிடமிருந்து வெட்டுக்கத்தி, 1,900 ரிங்கிட் (S$575.15) ரொக்கம், இரு கைப்பேசிகள், மோட்டார்சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

“அந்தக் கைப்பேசிகளில் ஒன்று, குளுவாங்கில் வழிப்பறி செய்யப்பட்டது என்பதும் மோட்டார்சைக்கிள் கூலாயில் காணாமல் போனது என்பதும் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று திரு குமார் தெரிவித்தார்.

கடந்த 2024ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரையில் அந்த ஆடவர் கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்