மூவார்: மலேசியாவில் ஆடவர் ஒருவர் 15 ஆண்டுகளாக பிரபல ‘சார் குவே தியாவ்’ (char kway teow) உணவு வகையை அதே விலைக்கு விற்றுவந்தார்.
அதற்குப் பிறகு சுமார் நான்கு மாதங்களுக்கு முன்புதான் அதன் விலையை வெறும் 50 சென் உயர்த்தினார். கோ டேங் ஹுவாங் எனும் அந்நபர் ‘சார் குவே தியாவ்’ உணவை மிகக் குறைவாக மூன்று ரிங்கிட்டுக்கு (0.92 வெள்ளி) விற்கிறார்.
உலகளவில் உணவு விலை அதிகரித்துவரும் வேளையில் இவர் அந்தப் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை.
“கட்டுப்படியான விலையில் உணவு வழங்குவதன் மூலம் எனது தாத்தா, அப்பாவின் பாதையில் செல்ல விரும்புகிறேன்,” என்றார் 71 வயது கோ. பல ஆண்டுகளுக்கு முன்பு இவரின் தாத்தா நடமாடும் கடை (mobile stall) ஒன்றில் ஒரு தட்டு ‘சார் குவே தியாவ்’வை 0.03 ரிங்கிட்டுக்கு விற்றார்.
இப்போது திரு கோ, மூவார் நகரின் சுங்கை அபோங் பகுதியில் இருக்கும் காப்பிக் கடை ஒன்றில் ‘சார் குவே தியாவ்’வை விற்று தனது குடும்பத் தொழிலைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
“குறிப்பாக அருகில் உள்ள சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளுக்காகவும் அவர்களின் குடும்பத்தாருக்காகவும் உணவைக் கட்டுப்படியான விலையில் வைத்திருக்க விரும்புகிறேன். அவர்களுக்கு ஏற்கெனவே பல கவலைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

