இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர் மாநிலத்தின் பல பகுதிகளில் இந்த மாதம் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக தற்பொழுது வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உட்பட 155,074 கட்டடங்களுக்கு 15% நீர்க் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
இந்தத் தள்ளுபடியால் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள்நல அமைப்புகள், வணிகங்கள், ஆலைகள் ஆகியவை பயன்பெறும் என்று ஜோகூர் முதல்வர் கூறினார்.
பல இல்லங்கள், கட்டடங்களுக்குத் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டதால், இந்தப் பிரச்சினை குறித்து ஒரு நியாயமான தீர்வுகாண தண்ணீர் விநியோகிப்பு நிறுவனமான ரேன்ஹில் எஸ்ஏஜே (Ranhill SAJ )யுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக முதல்வர் விளக்கினார்.
“இந்த உதவி ஏற்பாடு பாதிக்கப்பட்டோர் அனுபவித்த சிரமங்களுக்கு ஈடாகாது என்பதை நான் அறிவேன்.
“ஆயினும், இந்த முயற்சி பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று ஜோகூர் சட்டப்பேரவையில் திங்கட்கிழமை (மே 26) நிகழ்த்திய தனது இறுதி உரையில் முதல்வர் தெரிவித்தார்.
தென்ஜோகூர் பகுதிக்கான தண்ணீர் விநியோகத்தில் ஏற்பட்ட தடை குறித்து சட்டப்பேரவையில் பல உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் ஸ்கூடாய், கோத்தா இஸ்கந்தர், ஜோகூர் பாருவின் சில பிரிவுகள் என பல பகுதிகளில் இந்த மாதம் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.
தொடர்புடைய செய்திகள்
கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு நாள்கள் வரை நீடித்த இந்த நீர் விநியோகத் தடைக்கு திரு ஓன் ஹஃபிஸ் மன்னிப்பு கோரினார். ஜோகூர் மாநிலத்தின் மாச்சாப் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராகவும் திரு ஓன் ஹஃபிஸ் உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
“இது ஒரு சிறிய பிரச்சினை அல்ல என்பதை நான் அறிவேன், அதிலும் குறிப்பாக, குடும்பங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வர்த்தகக் கட்டடங்கள் என பல்வேறு இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன,” என்று ஜோகூர் மாநில முதல்வர் சொன்னார்.