ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல் தேதிகள் அறிவிப்பு

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல் தேதிகள் அறிவிப்பு

2 mins read
ஜோகூரில் ஜூலை 11ஆம் தேதியும் நெகிரி செம்பிலானில் ஆகஸ்ட் 1ஆம் தேதியும் வாக்குப்பதிவு
8d047b7f-d065-49c7-ae98-611da7d47180
ஜோகூரில் வாக்குப் பதிவு ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புத்ராஜெயா: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோகூர் மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஜூலை 11ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.

புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்ற பிறகு அதன் தலைவர் ரமலான் ஹாருன் தேர்தல் தேதிகளை முறைப்படி அறிவித்தார்.

முன்னதாக ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிங்களுக்கான வாக்குப் பதிவு, வேட்புமனுத் தாக்கல், பிரசாரங்களுக்கான காலகட்டம் போன்றவற்றுக்கான தேதி மற்றும் தேர்தல் ஆயத்த வேலைகள் குறித்து முடிவு செய்ய ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

ஜோகூர், நெகிரி செம்பிலான் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் முறையே ஜூன் 27, ஜூலை 18ல் நடைபெறும் என்று ஆணையம் கூறியது.

ஜோகூரில் முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 7ஆம் தேதியும் நெகிரி செம்பிலானில் முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 28ஆம் தேதி நடைபெறும்.

ஜோகூரில் மொத்தம் 2,727,926 வாக்காளர்களும் நெகிரி செம்பிலானில் 889,490 வாக்காளர்களும் உள்ளனர்.

ஜோகூருக்கான தேர்தல் பிரசாரம் ஜூன் 27 தொடங்கி ஜூலை 10, இரவு 11.59 வரை 14 நாள்களுக்கு நீடிக்கும். நெகிரி செம்பிலானில் ஜூலை 18 தொடங்கி ஜூலை 31, இரவு 11.59 வரை பிரசாரம் செய்ய முடியும்.

ஜோகூர் மாநிலத்தின் 16வது பொதுத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் ஜூன் 1ஆம் தேதி அதன் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி, 56 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். ஜோகூர் ஆட்சியாளர் இஸ்மாயிலின் ஒப்புதலைப் பெற்று இம்முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து ஜூன் 4ஆம் தேதி நெகிரி செம்பிலான் முதலமைச்சர் அமினுதீன் ஹாருன் அம்மாநிலத்தின் 36 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் மறுநாள் கலைக்கப்படும் என அறிவித்தார். நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்ஜோகூர்தேர்தல் ஆணையம்