பெட்டாலிங் ஜெயா: மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும்விட வாழ்க்கைச் செலவின உயர்வே மலேசியாவின் ஜோகூர் மாநில மக்களின் மிக முக்கியக் கவலையாக உருவெடுத்துள்ளதாக உத்திசார் பகுப்பாய்வு, கொள்கை ஆய்வுக் கழகமும் (இன்சாப்) இரு உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களும் இணைந்து நடத்திய ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் 4,000க்கும் மேற்பட்டோரிடம் அக்கருத்தாய்வு நடத்தப்பட்டது. வாழ்க்கைச் செலவின உயர்வே தங்களின் முதன்மைப் பிரச்சினை என்று அவர்களில் 60 விழுக்காட்டினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஜூலை 11ஆம் தேதி ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த ஆய்வு முடிவுகள் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மக்களின் சமையலறை மேசையில்தான் இந்தத் தேர்தலின் முடிவு தீர்மானிக்கப்படவுள்ளதாக இன்சாப் தலைவர் பேம்லா யோங் தெரிவித்துள்ளார்.
சாலைகள், வடிகால்கள், தெருவிளக்கு, போக்குவரத்து, வாகன நிறுத்துமிடம் போன்ற உள்கட்டமைப்பு சார்ந்த அன்றாடப் பிரச்சினைகள் குறித்துப் பாதிக்கும் மேற்பட்டோர் கவலை தெரிவித்தனர்.
தங்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என நால்வரில் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
“பெரும்பாலான குடும்பங்கள் மாதாந்தர நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. ஆயினும், மாநில அரசின் சமூக-பொருளியல் நிர்வாகத்தின்மீது மக்கள் இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளனர்,” என்று திருவாட்டி பேம்லா கூறினார்.
பொருளியல் நிலை, நேர்மையான ஆட்சிமுறை, பொதுமக்களின் நம்பிக்கை ஆகியனவும் தேசிய அளவில் முக்கியக் கவலைகளாகப் பார்க்கப்படுகின்றன.
ஆட்டங்காணும் வாக்கு வங்கி
முந்தைய தேர்தல்களில் ஜனநாயகச் செயல் கட்சிக்கு (டிஏபி) இருந்த வலுவான வாக்கு வங்கி இப்போது தளர்ந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
கடந்த 2018, 2022 தேர்தல்களில் அக்கட்சிக்கு வீசிய ஆதரவு அலை தற்போது ஓய்ந்துவிட்டதாகத் திருவாட்டி யோங் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 40% சீன வாக்காளர்கள் தற்பொழுது நடுநிலை வகிப்பதாக நம்பப்படுகிறது. வெறும் முழக்கங்களை நம்பாமல், செயல்திறனைக் கொண்டே கட்சிகளை அவர்கள் மதிப்பிடத் தொடங்கியுள்ளனர்.
இன்னும் 47% வாக்காளர்கள் எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யாததால், அத்தகைய வாக்காளர்களைக் கவரும் கூட்டணியே ஜோகூர் தேர்தலில் வெற்றிபெறும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

