ஜோகூர் மக்களின் நலனைப் பாதுகாக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்

ஜோகூர் மக்களின் நலனைப் பாதுகாக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்

2 mins read
94c37a5a-4417-4382-b14f-70ca20f71f82
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: முன்னுரிமைகளை மதிப்பிடுவதில் விவேகமுள்ள, முடிவுகளை எடுப்பதில் துணிச்சல் கொண்ட, மக்களின் நாடித்துடிப்பை உண்மையாகப் புரிந்துகொள்ளும் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் ஜோகூர் மக்களுக்குத் தேவை என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவரும் பிரதமருமான அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டணி மக்களின் குரலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கும் என்றும் ஜோகூரை மேலும் வளர்ச்சியடைந்ததாகவும் அனைவருக்கும் சிறந்ததாகவும் மாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

16வது ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, “ஜோகூர் முன்னேறுகிறது. ஹரப்பானுக்கு வாக்களியுங்கள்,” என்று அவர் தமது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளிப் பதிவின் மூலம் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில், கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யக் கடுமையாக உழைக்குமாறு பக்கத்தான் கூட்டணி அமைப்புக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு விடுத்தார்.

“ஜோகூர் மக்களின் நலன்களையும், மலேசிய மக்களின் நலன்களையும் கட்டிக்காக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் தலைவர்களையும் நாங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகிறோம். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்பி, இந்த மாநிலத்தை மகத்தானதாக உயர்த்த வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மக்களைச் சென்றடைவதற்கும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், திரு அன்வார் ஜோகூரில் பக்கத்தானின் முதல் நாள் பிரசாரத்தைப் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஏழு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாகப் பக்கத்தான் கூட்டணிக்கு வாக்காளர் ஆதரவை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக, இந்த நிகழ்ச்சிகளில் மக்களுடனான சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் மற்றும் உள்ளூர்ச் சமூகத்தினருடனான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இந்தத் தேர்தலில், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அனைத்து 56 மாநிலத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அவர்களில் 20 பேர் பிகேஆர் கட்சியையும், 19 பேர் அமானா கட்சியையும், 17 பேர் டிஏபி கட்சியையும் சேர்ந்தவர்கள்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஒட்டுமொத்தமாக, ஜோகூர் தேர்தலில் 56 மாநில இடங்களுக்கு 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர் பாருகூட்டணிவாக்காளர்