ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
காரில் சென்றுகொண்டிருந்த அந்த இருவரையும் ஜோகூர் காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்த 54,831 ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
“ஜோகூர் பாருவில் உள்ள ஜாலான் தம்போய், தாமான் ஸ்ரீ பகாகியா ஆகிய இடங்களில் அதிரடி நடவடிக்கை நடத்தப்பட்டது. அப்போது சாம்பல் நிற கார் அவ்விடத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் சென்றுகொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
“அந்த காரை அவர்கள் தங்கள் வாகனத்தில் ஜாலான் பெர்சியாரான் அலிஃப் ஹார்மொனி வரை பின்தொடர்ந்தனர். காரைச் சோதனையிட அதிகாரிகள் அணுகியபோது, கார் ஓட்டுநர் காரை அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றார். அவர் அபாயகரமான முறையில் காரை ஓட்டினார். இதில் காவல்துறை அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். “கார் மோதியதில் இரு அதிகாரிகளுக்குக் கரத்தில் காயம் ஏற்பட்டது,” என்று ஜோகூர் காவல்துறையின் தலைவர் ஆணையர் எம். குமார் தெரிவித்தார்.
இஸ்கந்தர் கடலோர நெடுஞ்சாலை, செகண்ட் லிங்க் விரைவுச்சாலையில் அதிவேகமாகச் சென்ற காரைக் காவல்துறை வாகனம் துரத்தியதாக அவர் கூறினார்.
சாலை சுங்கச் சாவடியின் தடுப்பை உடைத்துக்கொண்டு கார் சென்றதாகத் திரு குமார் தெரிவித்தார்.
கூலாய், குளுவாங் ஆகிய இடங்களிலிருந்தும் காவல்துறை வாகனங்கள் அந்தக் காரைத் துரத்தியதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒருவழியாக அந்த காரில் இருந்தோர் சிம்பாங் ரெங்கத்தில் பிடிபட்டனர்.
காரை 38 வயது சிங்கப்பூர் பெண் ஓட்டியதாகவும் அவருடன் 49 வயது மலேசிய ஆடவர் பயணம் செய்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருவரும் கைது செய்யப்பட்டனர்.
காரில் இருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரும் போதைப்பொருள் உட்கொண்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து, ஜோகூர் பாருவில் இரண்டு இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு மேலும் பல போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

