ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத் தேர்தல் நெருங்கும் வேளையில் வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கான பயணத் திட்டங்களை இப்போதே வரைந்துவருகின்றனர்.
சிங்கப்பூரில் வேலையிலிருக்கும் சிலர் விடுப்பு எடுத்துக்கொண்டு ஜோகூர் சென்று வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூலை 10ஆம் தேதி காரில் பொந்தியான் செல்லட்ஹ் திட்டமிட்டுள்ளார், 20 வயது பால்கிஸ் முஸாக்கிர்.
முதன்முறையாக வாக்களிக்கவிருக்கும் அவர் பூலாய் செப்பாட்டாங் பகுதி வாக்காளராவார்.
“அரசியல் கட்சிகளின் அடிப்படையில் மட்டும் பார்க்காமல் வேட்பாளர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு அதன்படி வாக்களிக்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் டான் ஷியாவ் ஹுய் முன்கூட்டியே வீடு திரும்பத் திட்டமிட்டுள்ளார். 53 வயது டான், ஸ்டுலாங் பகுதி வாக்காளராவார்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க அவர் ஜூலை 10ஆம் தேதி, அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர் செல்லவிருக்கிறார்.
“மலேசியர்கள் பலர் வாக்களிக்கச் சொந்த ஊர் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நான் முன்னரே எல்லையைக் கடக்கத் திட்டமிட்டுள்ளேன்,” என்று திருவாட்டி டான் குறிப்பிட்டார்.

