தங்காக்: ஜோகூர் மாநில அரசாங்கம் அந்தப் பகுதியில் நிலவும் மனிதர் - யானை பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்திவருகிறது.
வளர்ச்சிக்கும் பல்லுயிர்ப் பாதுகாப்புக்கும் இடையே சமநிலையை உறுதிசெய்ய, பல்வேறு பாதுகாப்பு, வனவிலங்கு நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய வளங்கள், சுற்றுப்புற நிலைத்தன்மை அமைச்சர் ஆர்த்தர் ஜோசஃப் குருப் கூறியிருக்கிறார்.
தற்போது ஜோகூரில் 120 முதல் 160 வரையிலான காட்டு யானைகள் உள்ளன. குளுவாங், கோத்தா திங்கி, மெர்சிங், சிகாமட் உள்ளிட்ட இடங்களில் அந்த யானைகள் அதிகம் உள்ளன.
“இந்த நிலைமையால் சில குடியிருப்பாளர்கள், குறிப்பாக, விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வனவிலங்குகளின் வளர்ச்சிக்கும் நீடித்த நிலைத்தன்மைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த மேலும் உத்திபூர்வ அணுகுமுறை தேவை,” என்று திரு ஆர்த்தர் கூறினார்.
“இதுவரை, மாநில அரசாங்கம் மனிதர் - யானை பிரச்சினையின் தொடர்பில் சிறப்புக் குழு ஒன்றை நிறுவியுள்ளது,” என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோத்தா திங்கியில் உள்ள ஜோகூர் யானைக் காப்பகம் மேம்படுத்தப்படுவதாகவும் திரு ஆர்த்தர் கூறினார். அது, வனவிலங்குப் பாதுகாப்புக் கல்விக்கான நிலையமாகவும் செயல்படும் என்றார் அவர்.
அதோடு, பத்து பஹாட் - ஜமாலுவாங் பாதையில், 30 மில்லியன் ரிங்கிட் செலவில் வனவிலங்குகள் கடப்பதற்கு அமைக்கப்படவிருக்கும் பாலம், 2028ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று திரு ஆர்த்தர் தெரிவித்தார். அது, ஜோகூரின் பல முக்கிய வனக் காப்பகங்களை இணைக்கும் ஒரு பாதையாகச் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், தீபகற்ப மலேசியாவில் பல்லுயிர்ப் பாதுகாப்பு, வனச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 60.6 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டின்கீழ், மொத்தம் 1,950 சமூக வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக திரு ஆர்த்தர் தெரிவித்தார்.

