உள்ளூர் வளங்களைக் காக்க 30% தரவு மைய விண்ணப்பங்களை ரத்து செய்தது ஜோகூர்

1 mins read
a7d2ae2e-360e-412f-955c-16d9ebe539b6
ஜோகூரில் என்விடியா உருவாக்கி வரும் தரவு மையம். - படம்: நியூயார்க் டைம்ஸ்

கோலாலம்பூர்: தரவு மையங்களை அமைக்க அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 30 விழுக்காட்டை ஜோகூர் மாநில அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

உள்ளூர் பொருளியலுக்கு அதிக நன்மை அளிக்கும் வகையில் வளங்களைப் பாதுகாப்பதில் தரவுத் துறையை ஒழுங்குபடுத்துவதிலும் அதிகாரிகள் கவனம் செலுத்துவதால் வெளியிலிருந்து வரும் விண்ணப்பங்களுக்கு அதிக முக்கியவத்துவம் இல்லை.

மலேசியாவின் ஆகப் பெரிய தரவு மையச் சந்தையாக உருவெடுத்திருக்கும் ஜோகூர், தென்கிழக்கு ஆசியாவிலும் ஆகப்பெரிய தரவு மையச் சந்தை என்ற நிலையை அடையத் தயாராகி வருகிறது.

தரவு மையங்களை நிறுவ அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை இவ்வாண்டு ஜூன் மாதம் அரசாங்கத்தின் தற்காலிகக் குழு ஒன்று பரிசீலிக்கத் தொடங்கியது.

பல பில்லியன் டாலர் மதிப்பிலான தரவு மையங்களால், இனி வரும் ஆண்டுகளில் உள்ளூர் வளங்களான தண்ணீர் மற்றும் மின்சார விநியோகங்கள் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்ததைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த ஐந்து மாதங்களில் அளிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 14ல் நான்கு ரத்து செய்யப்பட்டதாகக் குழுவின் துணைத்தலைவரான லீ டிங் ஹான், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

ஜோகூர் மாநிலத்தில் 1.65 மில்லியன் சதுர அடிப் பரப்பளவில் 13 தரவு மையங்கள் செயல்படுகின்றன.

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அந்த மாநிலத்தின் தரவு மைய ஆற்றல் 10 மெகாவாட் என்பதிலிருந்து தற்போது 1.3 கிகாவாட்டுக்கு வளர்ந்திருக்கிறது. 2027ஆம் ஆண்டு இது இரட்டிப்பாகி 2.7 கிகாவாட்டைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு லீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்தரவுவிண்ணப்பம்