மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் மூத்த மகனும், ஜோகூர் மாநில ஆட்சியாளருமான இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், சிங்கப்பூரில் பல்லாண்டுகளாக உள்ள அரச குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்பது குறித்து ஆலோசிப்பதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் விவரங்கள் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சொத்து மேம்பாட்டாளர்களுடனும் நிலத்தை வாங்கக்கூடியோருடனும் ஜோகூர் இளவரசர் தொடர்பில் உள்ளதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
அந்த நிலம் 16.6 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. ஹாலந்து ரோடு, டையர்சால் அவென்யூ அருகில் உள்ள சாலைச் சந்திப்பின் பக்கமாக அது அமைந்துள்ளது என்று சொத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த விற்பனை, அரச குடும்பத்துடன் சிங்கப்பூர் அரசாங்கம் ஜுன் 2025ல் செய்துள்ள ஒப்பந்தத்தின் அங்கமாகும். அதன்படி, சிங்கப்பூர் பூமலைக்கு அருகே உள்ள நிலங்களை மாற்றிக்கொள்வது என்ற புரிந்துணர்வு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஜோகூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்களின் மேம்பாட்டுத் திட்டங்கள், சிங்கப்பூர் பூமலையைப் பாதிக்காமல் விலகியிருப்பதை உறுதிசெய்வதே இந்த நில மாற்றத்தின் முக்கிய நோக்கம்.
சிங்கப்பூர் நில ஆணையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) வழங்கிய கூட்டு அறிக்கையில் தனியார் சொத்து உரிமையாளர்களின் திட்டங்களில் தாங்கள் சம்பந்தப்படுவதில்லை என்று அறிவித்துள்ளன.