ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் உள்ள ஸ்துலாங் லாவுட் (Stulang Laut) எனும் பகுதியை தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத்தலமான கோ சாமுய்யுடன் (Koh Samui) ஒப்பிடும் காணொளி ஒன்று டிக்டாக் சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கடற்கரைப் பகுதியான ஸ்துலாங் லாவுட்டைப் படமெடுக்கப் பலர் அங்கு சென்று வருகின்றனர். அதற்காக அவர்கள் குறுகிய சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பது அப்பகுதி குடியிருப்பாளர்களைக் கோபப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் ஜாலான் பெர்தானா சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் சிலர் குறை கூறுகின்றனர். சிங்கப்பூரைப் பார்த்தபடி இருக்கும் ஸ்துலாங் லாவுட், கோ சமுய்யைப் போல் அறவே இல்லை என்று வேறு சிலர் கூறினர்.
வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுவதால் சாலை மேலும் குறுகலாய் ஆவதாக குடியிருப்பாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
வாகனங்களை சீரற்ற முறையில் நிறுத்த வேண்டாம் என்று ஜோகூர் பாரு மேயர் முகம்மது நூரஸாம் ஒஸ்மான், ஸ்துலாங் லாவுட்டுக்குச் செல்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளார். தன்னைத் தொடர்புகொண்டபோது அவர் அவ்வாறு சொன்னார்.
சம்பந்தப்பட்டப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாகவும் எச்சரிக்கைக்குப் பின்னரும் இடம் மாற்றாமல் இருக்கும் சரியாக நிறுத்தப்படாத வாகனங்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்படலாம் என்றும் அவர் கூறினார்.